Sunday 2 September 2012

குத்துக்கல்வலசையின் பெருங்கற்கால பண்பாடு

இதைப் படிப்பவர்கள் நான் முன்னர் எழுதிய 2 பதிவுகளையும் படித்துவிட்டு இதைப்படிக்க வேண்டுகிறேன். 

பெருங்கற்கால மக்கள் வேல் (ஒருதலைச் சூலம்), சூல வழிபாட்டையும் மேற்கொண்டனர். இவை பிற்பாடு முருக வழிபாடாகவும் சிவன் துர்க்கை வழிபாடாகவும் மாற்றப்பட்டது. ( http://ta.wikipedia.org/s/qho )
குத்துக்கல் வலசையிலும் இதைப் போலவே சூல வழிபாட்டுச் சின்னம் காணப்படுகிறது.



நிற்க 

இதற்கருகில் இவர்கள் முன்னோர் காலத்தில் இந்த சூலத்தையோ இதைப் போன்ற மற்றொரு சூலத்தையோ பக்கத்தில் காணப்படும் கல்படிகளின் மேற்பகுதியில் குத்தி வழிபட்டிருக்கலாம்.


பொதியில் ஆயர்கள் 

கழல்தொடி ஆஅய் மழைதவழ் பொதியில் - குறுந்தொகை 84

என்று கூறப்படும் பொதியில் ஆயர்கள் இங்குள்ள இடையர் மக்களுக்கு தொடர்புடையவராய் இருக்கலாம். இங்குள்ள இடையர் மக்களே  குத்துக்கல்லை வழிபட்டதாகவும் தற்போது வழிபடுவதில்லை என்றும் கூறினர். 

ஆயர் அல்லது இடையர் இவர்கள் புதிய மற்றும் பெருங்கற்காலத்திலும் 
முக்கிய பங்காற்றியவர்கள். சங்க இலக்கியத்திலும் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இதை ஆயர் குல மன்னர்களிடமிருந்து கைப்பற்றியதாக மதுரைக்காஞ்சி பாடல்கள் உண்டு. அவை,

1. அவை இருந்த பெரும்பொதியில் பேய்மகளிர் ஆடத் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் வென்றான் -மதுரைக்காஞ்சி 161


2. திதியன் என்ற மன்னன் பொதியிலை ஆண்டான்.

செல்சமம் கடந்த வில்கெழு தடக்கை, பொதியிற் செல்வன் பொலந்தேர்த் திதியன், இன்னிசை இயத்தின் கறங்கும் கல்-மிசை அருவி (குற்றாலம்) – ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் – அகம் 25

3. திதியன் என்றவனை தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் வென்றான்.
கொய்சுவற் புரவிக் கொடித்தேர்ச் செழியன்
ஆலங் கானத்து அகன்தலை சிவப்பச்,
சேரல், செம்பியன், சினம்கெழு திதியன் - அகம் 36

ஒரு வேளை திதியனே கூட பொதியில் ஆயர் தலைவனாக இருக்கலாம். அதனால்  திதியனை வென்ற தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் அவன் ஆண்ட பொதியிலை பின்னொரு காலத்தில் வென்றிருக்கக் கூடும். 

மேலுள்ள சான்றுகளை வைத்து பார்க்கும் போது பொதியில் ஆயர் மறக்குணம் மிக்கவராய் இருந்தனர் என்பது தெளிவு.

படிநிலை வளர்ச்சி

1. குத்துக்கல், நடுகல் வழிபாடு
2. சின்ன வழிபாடு - இப்பதிவில் மேற்கூறப்பட்ட சூல வழிபாடு
3. பின்னர் உருவ வழிபாடு.

இம்மூன்றுமே வழிபாட்டு முறையில் அடுத்தடுத்து வருவன. இதை வைத்து பார்க்கும் போது பெருங்கற்கால சமூகம் இங்கு தொன்றுதொட்டு இருந்தது தெரிகிறது.

Saturday 18 August 2012

பெருங்கற்கால கிராமமா தென்காசி? -1

குத்துக்கல் வலசை கல்லை நான் இயற்கையாய் எடுத்துக் கொள்ளாததன் காரணங்கள்,


1. இந்த அடிபாகம் கல்லை விழுந்து விடக்கூடாது என்று மனிதர்கள் ஏற்படுத்தியது போன்றே எனக்குத் தோன்றுகிறது. இந்த அடிப்பாகத்தை போல் வேறு சில இயற்கைக் குத்துக்கற்கள் பொருந்துவதாய் இல்லை.
2. மேலும் இதன் மேல்பாகம் இன்னும் ஐயம் ஊட்டுவதாய் உள்ளது. பார்பவர்கள் யாருக்காவது இதன் மேல் பாகத்தின் உருவத்தைக் கணிக்க முடிந்தால் சொல்லவும். ஆனால் இன்னும் நான் மேல் சென்று பார்க்கவில்லை என்பதால் இதை பற்றி உறுதியாகக் கூறுவதற்கில்லை.
3. அடுத்தது இந்த இடம் பெயர் குத்துக்கல் "வலசை" என்பதே. வலசை என்பது வரிசையை குறிக்கும். இன்றும் வலசை போதல் என்ற சொல் கிராமப்புறங்களில் உண்டு. அதற்கேத்தார் போல் இந்த சுற்று வட்டார மக்களும் முன் காலத்தில் இதன் தொடர்சியாக மேலும் 4,5 கற்கள் இருந்ததாக கூறுகின்றனர்.

4. அடுத்தது இதை இந்த மக்கள் வழிபட்டதாகவும், அங்குள்ள மக்களும்.
5. அடுத்தது கல், சின்னம், உருவம் என்று தெய்வ வழிபாட்டின் படிம வளர்ச்சியை இங்கு காணும் சான்றுகள் மறைமுகமாக தெரிவிப்பதாகத் தெரிகிறது. தற்போது இந்த கல்லை விட்டு அங்குள்ள வேறொரு தெய்வத்தை வணங்கியதாக அவர்கள் கூறுவது இதற்கு மேலும் சான்று.

இப்போதைக்கு இதன் அடிப்பாகம் இயற்கையானதா என்பது பற்றிய மாற்றுக்கருத்துக்களை பகிரவும். இதன் வழிபாட்டு முறை பற்றி அடுத்த பதிவில் கூறுகிறேன். கற்கால ஆராய்ச்சியாளர் எவராவது வந்து இதை ஆராய்ந்தால் நன்றாக இருக்கும்.

பெருங்கற்கால கிராமமா தென்காசி ?

எனக்கு தென்காசியில் ஒரு இடத்தைக் கண்டு நெடுநாட்களாக ஒரு ஐயம் உண்டு. அதை நீங்கள் "சூலம்" என்ற தொடரில் கண்டிருக்கலாம். நான் அது என்ன இடம் என்று இறுதியில் படத்தோடு இணைத்துள்ளேன்.
அதைப் பார்ப்பதற்கு முன் பெருங்கற்கால செண்பகப்பொழிலுக்கு (தென்காசி) சென்று வருவோம்.

செண்பகப்பொழிலில் தமிழக தொல்லியல் ஆய்வுத்துறையைச் சேர்ந்த சம்பத் மற்றும் செந்தில் செல்வக்குமாரன் போன்ற ஆய்வாளர்கள் அழுதகன்னி ஆற்றை 1980களில் ஆய்ந்ததில், இந்த ஆற்றுப்படுகையில் இடைக்கற்கால ஆயுதங்கள் மற்றும் பெருங்கற்கால நில அடையாளக் கற்குவைகளும் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன.

இது தவிர்த்து ஆயிரப்பேரி என்ற இடத்தில் கண்டறியப்பட்ட பெருங்கற்கால பானைகள் இன்று குற்றாலம் தொல்லியல் அருங்காட்சியகத்துள் (http://www.tnarch.gov.in/sitemus/mus10.htm) வைக்கப்பட்டுளது. இடைக்கற்காலம், புதிய கற்காலம், பெருங்கற்காலம் மூன்றும் வரிசையாக வருவன. இம்மூன்று காலப் பொருட்களும் இங்கு தொடர்ந்து கிடைக்கின்றதால் இங்கும் தங்கள் நிலையான குடியிருப்புக்களை மக்கள் தொடர்ந்து அமைத்துக் கொண்டது தெரிகிறது.

நான் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற போது அதனருகில் பானை செய்யும் குயவர்கள் இருந்தார்கள். அவர்களின் வீடமைப்பு முறை சாய்வான நிலங்களில் ஊட்டியில் உள்ளது போல் அமைத்திருந்தனர். இப்போது அந்த இடமே மாறிவிட்டது. எனக்கென்னவோ இவர்களிடம் பெருங்கற்காலத் தன்மை ஒட்டிக்கொண்டிருப்பது போல் தெரிகிரது.

ஐயத்துக்கு உட்பட்ட இடம்


இந்த இடம் பெயர் குத்துக்கல் வலசை. இந்த கல்லை ஒருகாலத்தில் வழிபட்டதாக இங்குள்ளவர்கள் கூறுகிறார்கள். கேட்டால் இயற்கையாக உருவானதாக கூருகிறார்கள். 

Sunday 12 August 2012

தமிழகத்தின் உலோகக்காலமும் மூலத்தமிழ் எழுத்தும்

தமிழகத்தில்  இரும்புக்காலம் கி.மு. 2000 அளவில் தோன்றியதாக கூறுகின்றனர், இதை பின்வருவன கொண்டு நிறுவலாம் 

௧. தமிழக முத்திரைக் காசு வார்ப்புக் கூடுகள் (http://ta.wikipedia.org/s/15jq

தமிழகத்தின் முத்திரைக் காசுகள் பெரும்பாலும் பொ.மு. 5ஆம் நூற்றாண்டு முதல் பொ.மு. 2ஆம் நூற்றாண்டினவையாக இருக்கின்றன.  

பொ.மு. 5ஆம் நூற்றாண்டு  காசுகள்

ஊர்மாவட்டம்நூற்றாண்டு (பொ.மு.)
மாம்பலம்சென்னை5
வெம்பாவூர்திருச்சி5
வீரசிகாமணிநெல்லை5
தாராபுரம்ஈரோடு5

தமிழகத்தில் முத்திரைக் காசுகளை வெளியிட பயன்படுத்திய வார்ப்புக் கூடுகள் கிடைத்ததை வைத்து தமிழர் அந்த வார்ப்புக் கூடுகளை செய்ய எவ்வளவு காலம் முயன்றிருப்பர் அக்கூட்டின் பயன்படுத்தப்பட்ட உலோக உருக்கு முறை தோன்றி அது தமிழகத்தில் முழு வழக்கில் வர எவ்வளவு நூற்றாண்டுகள் பிடித்திருக்கும் என்று என்னிப்பார்ர்க்க வேண்டும். அப்படி ஆராய்வோமானால் குறைந்தது கி.மு.1500கலிலேயே உலோக காலம் கண்டதாக கூறலாம்.

௨. http://www.hindu.com/2005/02/17/stories/2005021704471300.htm (Rudimentary Tamil-Brahmi script' unearthed at Adichanallur)

இந்த செய்தியில் உள்ள பானைகள் "preliminary thermo-luminescence dating," முஉளம் குறைந்தது கி.மு. 500 முதல் அதிகபட்சம் கி.மு. 1500வரை பழமை வாய்ந்தது அறியப்பட்டன. இதை சிவசுப்பிரமணியன் போன்ற ஆய்வாளர்கள் மூலப் பிராமி என சந்தேகிக்கின்றனர். இது தமிழ் பிராமி போன்ற பிராமி எழுத்துக்களின் தாய் என ஆராய்ச்சியாளர்களால் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டால் தமிழ் எழுத்துகளின் தோற்றம் கி.மு. 1500 வரை கூட செல்லக்கூடும்.


கேள்விகள்

௧. preliminary thermo-luminescence dating என்றால் என்ன?
௨. //This date is, however, subject to confirmation by carbon-14 dating, which is the more reliable method.// 

என்று சத்திய மூர்த்தி கூறுவதைப் பார்த்தால் என் carbon-14 dating மூலம் இதன் காலம் நிறுவப்படவில்லை? ச்ய்தி வந்து (Feb 17, 2005) பல வருடங்கள் ஆகிவிட்டதே?

௩. carbon-14 dating உலோகங்களுக்கு மட்டும் தான் செய்ய இயலுமா? கல்வெட்டுகளுக்கு செய்ய இயலாதா?

௪. முடியாது எனில் கல்வெட்டு எழுத்து வெட்ட பயன்படுத்தப்பட்ட கருவியின் துகள்கள் எழுத்துகளில் படிந்திருக்குமே? அதை வைத்து ஆராய்ந்தால் என்ன?

சில ஒப்பிடுகள்



 

இப்படத்தில் உள்ள எழுத்தின் குறைந்த பழமையே கி.மு. 500 எனில் பின்வரும் படத்தோடு இந்த எழுத்துக்களை ஒப்பிட்டு பார்த்தால் கிமு. 500ல் இருந்து கி.பி. நூறு வரை பெரிய மாற்றம் எழுத்தில் இல்லை என்பதை அறிய இயலும்.

படிமம்:History of Tamil script.jpg 

அதாவது காலம் பின்னோக்கி செல்லச் செல்ல எழுத்துக்களில் ஏற்படும் மாற்றத்துக்கான காலமும் கூடிக் கொண்டே போகிறது. 

உதாரணம்

௧. கிபி. இரு நூறு முதல் கிபி. முன்னூறு வரை ஒரு மாற்றம் - கால இடை வேளை - நூறு வருடங்கள் 
௨. கிமு,  முன்னூறு முதல் கிபி நூறு வரை ஒரு மாற்றம்- கால இடை வேளை - நான் நூறு வருடங்கள்


இது இப்படி இருக்கையில்


என் முந்திய பதிப்பான "தென்காசியில் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மைக் கல்வெட்டு" என்னும் இணைப்பில் உள்ள கல்வெட்டு எழுத்துக்கள் பன் மடங்கு மாற்றம் அடைந்ததை பார்க்கும்  போது இதை கிமு 2000த்தில்  பொறிக்கப்பட்டது என்று கூறினாலும் தகும் என்பேன்.


படிமம்:சன்யாசிப்படவுக் கல்வெட்டு.JPG 

Saturday 21 July 2012

தென்காசியில் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மைக் கல்வெட்டு


மேலே நீங்கள் காண்பது குற்றால மலையிலுள்ள தேனருவி பக்கத்தில் சன்யாசிப்  படவு என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 2500 வருடங்களுக்கு முற்பட்ட கல்வெட்டு.

 இதில்  காணப்படும் எழுத்துக்கள்  சில மூலப் பிராமி எழுத்துக்கள் போல் இருந்தாலும் இதை கல்வெட்டு ஆய்வாளர்களால் முழுவதுமாக படிக்க இயலவில்லை.

இதிலுள்ள எழுத்துக்களில் சில கி.மு. முன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகத் தெரிகிறது. மற்றவை அதற்கும் முந்திய எழுத்துக்களாக இருக்கலாம். இவற்றில் காணப்படும் எழுத்துக்கள் சில கி.மு. முன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த மாங்குளம்  கல்வெட்டுகளிலுள்ள எழுத்துக்களுடன் பொருந்தாததால் இதை  அக்கல்வேட்டுகளுக்கு முந்தியவையாகவே கொண்டுள்ளனர். இதன்  மாதிரி  குற்றாலம் தொல்லியல் அருங்காட்சியகத்தில் உள்ளது.

இப்பொதியில் மலையை ஆண்ட மன்னர்கள்

1. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இதை ஆயர் குல மன்னர்களிடமிருந்து கைப்பற்றியதாக மதுரைக்காஞ்சி பாடல்கள்  உண்டு. அவை,

அவை இருந்த பெரும்பொதியில் பேய்மகளிர் ஆடத் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் வென்றான் -மதுரைக்காஞ்சி 161

தென்னவன் பெயரிய துன் அருந் துப்பின் தொன்முது கடவுள் பின்னர் மேய, வரைதாழ் அருவிப் பொருப்பின் பொருந” – மதுரைக்காஞ்சி 40-43

கழல்தொடி ஆஅய் மழைதவழ் பொதியில் - குறுந்தொகை 84

2. திதியன் என்ற மன்னன் பொதியிலை ஆண்டான்.

செல்சமம் கடந்த வில்கெழு தடக்கை, பொதியிற் செல்வன் பொலந்தேர்த் திதியன், இன்னிசை இயத்தின் கறங்கும் கல்-மிசை அருவி (குற்றாலம்) – ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் – அகம் 25

3. திதியன் என்றவனை தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் வென்றான்.
கொய்சுவற் புரவிக் கொடித்தேர்ச் செழியன்
ஆலங் கானத்து அகன்தலை சிவப்பச்,
சேரல், செம்பியன், சினம்கெழு திதியன் -  அகம் 36


என் கருத்து
கள் 


*  இதனால் பொதியில் ஆயரிடத்தும் பாண்டியரிடத்தும் இருந்தது தெரிகிறது.
* தமிழ்நாட்டில் முற்கால கல்வெட்டுகள் கிடைத்த குகைளெல்லாம் வேந்தர்களாலும் குருநிலத்தவர்களாலும் முனிவர்களுக்கு வழங்கப்பட்டவை என கல்வெட்டுகள் முலம் தெரிகிறது.
* அதனால் இக்குகைக்கல்வெட்டுகளும் இதைப் போன்ற செய்தியையே தருவதாகக் கொள்ளலாம்.

நான் ஐயப்படும் சில எழுத்துக்கள்
* இதிலுள்ள முதல் வரியின் ஐந்தாம் எழுத்து ந் போல் தெரிகிறது. அதே போல் முதல் வரியின் இரண்டாம் எழுத்து 'ந'கரத்தில் வேறொரு எழுத்தாக இருக்கலாம். முதல் வரியின் நான்காம் எழுத்து 'ங்'கரம் போலும் உள்ளது.
* இரண்டாம் வரியின் முதல் எழுத்து 'வ'கரம் போலும், நான்காம் எழுத்து 'ல'கரம் போலும், ஐந்தாம் எழுத்து  'ர'கரம் போலும், உள்ளது.

சேசாத்ரி அவர்கள் ஐயப்படும் எழுத்துக்கள்


இரண்டாம் வரியின் முதல் எழுத்து வகரம் அல்ல. இனறைய தெலுங்கில் அது ரகர ஒலி. இவ் எழுத்துகளில் பக்கவாட்டில் சிறிதாக உள்ள ஒற்றை இரட்டைக் கோடுகள் எதைக் குறிக்கின்றன என்று புரியவில்லை. உகர ஊகார ஒலிகளாக் இருக்கமோ என ஐயப்படுகிறேன் இதன் முதல் எழுத்தில் மேலே புள்ளியுடன் உள்ள எழுத்து எகரம் ஆகலாம்

இரண்டாம் வரியில் உள்ள நடு எழுத்து இதாவது, முக்கோணம் சிந்து எழுத்தில் மகரம் ஆகும் . எனவே இரண்டாம் வரியின் இறுதி மூன்று எழுத்துகளை மேலுரூ > மேலூர் என படிக்கலாம்.

இது என்னவோ பிராமியும் சிந்து எழுத்தும் கலந்த ஏதோ ஒரு மாற்று எழுத்து போலத் தான் தோன்றுகிறது. இதில் ச் + ஒ, ந + ஊ போன்றும் உயிர்மெய், உயிர் என பிரித்து குறிப்பிட்டு இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் இது பிராமி அல்ல என்பது மட்டும் தெளிவு.


அஸ்கோ பர்பொலோ கருத்தோடு என் ஒப்பீடு


சிந்துவெளி ''ம'' ஒருவேளை இதில் பொறிக்கப்பட்டிருப்பின் 2ஆம் வரியின்
முதல் எழுத்து வெள்ளி மீனின் சிந்துவெளிக் குறியீடாகவும் இருக்கலாம்.
ஏனென்றால் முறையே 2 வெள்ளிக்கும் 6 கார்த்திகைக்கும் 7 சப்தரிசி
மண்டலத்துக்கும் ஊரியவை. இங்கு காணப்படும் 2ஆம் வரியின் முதல் எழுத்து மீன் போலுள்ளது.

- அஸ்கோ பர்போலா கொடுத்துள்ள ஊகத்தின் அடிப்படையிலான விளக்கங்கள்.



உதவி தேவை

* இதைப்படிக்க நிறைய நபர்களிடம் கேட்டிருக்கிறேன். உங்களுக்குத் தெறிந்த கல்வெட்டு ஆய்வாளர்கள் எவராவது இருந்தால் அவர்களிடம் தெரிவித்து இதைப் படிக்கச சொல்லவும். தகவலறிந்தால் தெரிவியுங்கள்.