Saturday 21 July 2012

தென்காசியில் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மைக் கல்வெட்டு


மேலே நீங்கள் காண்பது குற்றால மலையிலுள்ள தேனருவி பக்கத்தில் சன்யாசிப்  படவு என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 2500 வருடங்களுக்கு முற்பட்ட கல்வெட்டு.

 இதில்  காணப்படும் எழுத்துக்கள்  சில மூலப் பிராமி எழுத்துக்கள் போல் இருந்தாலும் இதை கல்வெட்டு ஆய்வாளர்களால் முழுவதுமாக படிக்க இயலவில்லை.

இதிலுள்ள எழுத்துக்களில் சில கி.மு. முன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகத் தெரிகிறது. மற்றவை அதற்கும் முந்திய எழுத்துக்களாக இருக்கலாம். இவற்றில் காணப்படும் எழுத்துக்கள் சில கி.மு. முன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த மாங்குளம்  கல்வெட்டுகளிலுள்ள எழுத்துக்களுடன் பொருந்தாததால் இதை  அக்கல்வேட்டுகளுக்கு முந்தியவையாகவே கொண்டுள்ளனர். இதன்  மாதிரி  குற்றாலம் தொல்லியல் அருங்காட்சியகத்தில் உள்ளது.

இப்பொதியில் மலையை ஆண்ட மன்னர்கள்

1. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இதை ஆயர் குல மன்னர்களிடமிருந்து கைப்பற்றியதாக மதுரைக்காஞ்சி பாடல்கள்  உண்டு. அவை,

அவை இருந்த பெரும்பொதியில் பேய்மகளிர் ஆடத் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் வென்றான் -மதுரைக்காஞ்சி 161

தென்னவன் பெயரிய துன் அருந் துப்பின் தொன்முது கடவுள் பின்னர் மேய, வரைதாழ் அருவிப் பொருப்பின் பொருந” – மதுரைக்காஞ்சி 40-43

கழல்தொடி ஆஅய் மழைதவழ் பொதியில் - குறுந்தொகை 84

2. திதியன் என்ற மன்னன் பொதியிலை ஆண்டான்.

செல்சமம் கடந்த வில்கெழு தடக்கை, பொதியிற் செல்வன் பொலந்தேர்த் திதியன், இன்னிசை இயத்தின் கறங்கும் கல்-மிசை அருவி (குற்றாலம்) – ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் – அகம் 25

3. திதியன் என்றவனை தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் வென்றான்.
கொய்சுவற் புரவிக் கொடித்தேர்ச் செழியன்
ஆலங் கானத்து அகன்தலை சிவப்பச்,
சேரல், செம்பியன், சினம்கெழு திதியன் -  அகம் 36


என் கருத்து
கள் 


*  இதனால் பொதியில் ஆயரிடத்தும் பாண்டியரிடத்தும் இருந்தது தெரிகிறது.
* தமிழ்நாட்டில் முற்கால கல்வெட்டுகள் கிடைத்த குகைளெல்லாம் வேந்தர்களாலும் குருநிலத்தவர்களாலும் முனிவர்களுக்கு வழங்கப்பட்டவை என கல்வெட்டுகள் முலம் தெரிகிறது.
* அதனால் இக்குகைக்கல்வெட்டுகளும் இதைப் போன்ற செய்தியையே தருவதாகக் கொள்ளலாம்.

நான் ஐயப்படும் சில எழுத்துக்கள்
* இதிலுள்ள முதல் வரியின் ஐந்தாம் எழுத்து ந் போல் தெரிகிறது. அதே போல் முதல் வரியின் இரண்டாம் எழுத்து 'ந'கரத்தில் வேறொரு எழுத்தாக இருக்கலாம். முதல் வரியின் நான்காம் எழுத்து 'ங்'கரம் போலும் உள்ளது.
* இரண்டாம் வரியின் முதல் எழுத்து 'வ'கரம் போலும், நான்காம் எழுத்து 'ல'கரம் போலும், ஐந்தாம் எழுத்து  'ர'கரம் போலும், உள்ளது.

சேசாத்ரி அவர்கள் ஐயப்படும் எழுத்துக்கள்


இரண்டாம் வரியின் முதல் எழுத்து வகரம் அல்ல. இனறைய தெலுங்கில் அது ரகர ஒலி. இவ் எழுத்துகளில் பக்கவாட்டில் சிறிதாக உள்ள ஒற்றை இரட்டைக் கோடுகள் எதைக் குறிக்கின்றன என்று புரியவில்லை. உகர ஊகார ஒலிகளாக் இருக்கமோ என ஐயப்படுகிறேன் இதன் முதல் எழுத்தில் மேலே புள்ளியுடன் உள்ள எழுத்து எகரம் ஆகலாம்

இரண்டாம் வரியில் உள்ள நடு எழுத்து இதாவது, முக்கோணம் சிந்து எழுத்தில் மகரம் ஆகும் . எனவே இரண்டாம் வரியின் இறுதி மூன்று எழுத்துகளை மேலுரூ > மேலூர் என படிக்கலாம்.

இது என்னவோ பிராமியும் சிந்து எழுத்தும் கலந்த ஏதோ ஒரு மாற்று எழுத்து போலத் தான் தோன்றுகிறது. இதில் ச் + ஒ, ந + ஊ போன்றும் உயிர்மெய், உயிர் என பிரித்து குறிப்பிட்டு இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் இது பிராமி அல்ல என்பது மட்டும் தெளிவு.


அஸ்கோ பர்பொலோ கருத்தோடு என் ஒப்பீடு


சிந்துவெளி ''ம'' ஒருவேளை இதில் பொறிக்கப்பட்டிருப்பின் 2ஆம் வரியின்
முதல் எழுத்து வெள்ளி மீனின் சிந்துவெளிக் குறியீடாகவும் இருக்கலாம்.
ஏனென்றால் முறையே 2 வெள்ளிக்கும் 6 கார்த்திகைக்கும் 7 சப்தரிசி
மண்டலத்துக்கும் ஊரியவை. இங்கு காணப்படும் 2ஆம் வரியின் முதல் எழுத்து மீன் போலுள்ளது.

- அஸ்கோ பர்போலா கொடுத்துள்ள ஊகத்தின் அடிப்படையிலான விளக்கங்கள்.



உதவி தேவை

* இதைப்படிக்க நிறைய நபர்களிடம் கேட்டிருக்கிறேன். உங்களுக்குத் தெறிந்த கல்வெட்டு ஆய்வாளர்கள் எவராவது இருந்தால் அவர்களிடம் தெரிவித்து இதைப் படிக்கச சொல்லவும். தகவலறிந்தால் தெரிவியுங்கள்.