Thursday 27 June 2013

மகாவம்சம் தமிழர் வரலாற்றை திரிக்கிறதா? தவிர்கிறதா?

நான் படித்த வரலாற்று ஆய்வு நூல்களில் மகாவம்சம் தமிழர் வரலாற்றை மறைப்பதாகவும் திரிப்பதாகவும் சிங்களவர் வரலாற்றை மட்டும் ஏற்றிச் சொல்வதாகவும் நிறைய தமிழ் ஆய்வாளர்களும் ஆர்வளர்களும் எழுதப் பார்த்திருக்கிறேன். ஆனால் என் கருத்து யாதெனில் மகாவம்சத்துக்கு தமிழர் சிங்களவர் என்ற கண்ணோட்டம் கிடையாது என்பதே. ஆனால் நான் படித்தது அனைத்துமே களப்பிரர் காலத்துக்கும் அதற்கும் முற்பட்ட மகாவம்சப் பாடல்களின் மொழி பெயர்ப்பையே ஆகும். (Before 550 AD)

இதை பின்வரும் மூன்று அனுமானங்கள் மூலம் கூறுகிறேன். ஏறக்குறைய மகாவம்சத்தின் வரலாற்றுப் பாணியும் இதைப் போன்றுதான் உள்ளது. மகாவம்சம் மன்னர்களை மூன்று விதமாக பிரிக்கிறது. அதற்கு ஏற்ப வரலாற்றுத் தகவல்களையும் தருகிறது.

1. பௌத்தத்தை மட்டும் ஆதரிக்கும் துட்டகைமுனு போன்றவர்கள்

துட்டகைமுனுவின் வரலாற்றை மகாவம்சம் மிக விரிவாகவே கூறுகிறது. அதன் அளவைச் சொல்ல வேண்டுமானால் துட்டகைமுனு எல்லாளச் சோழனை விட குறைவான ஆட்சி ஆண்டுகளையே கொண்டவன். ஆனால் எல்லாளனை விட இவனைப் பற்றி வரலாறுகள் மகாவம்சத்தில் அதிகம்.

2. எல்லாளனைப் போல மற்ற மதங்களையும் பௌத்தத்தோடு ஆதரித்தவர்கள். இவர்கள் பௌத்தம் பால் எந்த எதிர்போக்கையும் கொண்டவர்கள் அல்ல. அதே சமயம் இவர்கள் பௌத்தத்தை மட்டும் ஆதரிப்போரும் அல்ல.

இந்த இரண்டாம் பிரிவு மன்னர்களைப் பற்றி மகாவம்சம் ஓரளவு செய்திகளை கூறுகிறது.

3. பௌத்தத்தை ஆதரிக்காதவர்கள்.

கி.மு. நாலாம் நூற்றாண்டு முதல் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை உருகுணை பகுதிகளை ஒரு பாண்டியர் குலத்தோர் ஆட்சி செய்துள்ளனர். இவர்களின் கல்வெட்டுகளில் இவர்கள் கொடுத்த நில தானத்தை பார்க்கும் போது இவர்கள் ஆரம்பக் காலங்களில் பௌத்தம் இலங்கையில் அறவே இல்லை. அதனால் இவர்கள் பற்றிய தரவை மகாவம்சம் தரவே இல்லை.

தமிழர் வரலாறு மகாவம்சத்தில் திரிக்கப்படுகிறதா?

நிச்சயம் இல்லை. இதை பின்வரும் தகவல்கள் உறுதிப்படுத்தும்.

1. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் ஆறு பாண்டிய மன்னர்கள் ஏறக்குறைய 40 வருடங்கள் இலங்கையை ஆண்டுள்ளனர். இவர்களில் இருவர் பௌத்தத்தை ஆதரித்ததாக கல்வெட்டுகள் உள்ளன. இவர்களை பற்றிய வரலாறை மகாவம்சம் நிரம்பவே கூறுகிறது.

2. பல மதங்களை ஆதரித்த எல்லாளனைக் கூட மகாவம்சம் நல்ல முறையில் ஆட்சி செய்தான் என்றே கூறுகிறது. இங்கும் திரிக்கவில்லை.

3. உருகுணையை ஆண்ட பாண்டியர் குலத்தின் கடைசி பெண்ணான சவரை என்ற பெண் துட்டகைமுனுவின் தகப்பனான காக வண்ண தீசனின் முதல் மனைவி. இவள் பௌத்த மத தானங்களை அதிகம் செய்தவள். இவளைப் பற்றித் தகவலையும் மகாவம்சம் தருகிறது.

(காகவண்ண தீசனின் இரண்டாம் மனைவியே விகாரமாதேவி ஆவாள். இவர்களின் புதல்வனே துட்டகைமுனு.)

ஆக இதிலிருந்தே மகாவம்சம் தமிழனா சிங்களனா எனப் பார்ப்பதில்லை எனவும் பௌத்தத்தை ஆதரித்தவனா இல்லையா என்பதை மட்டுமே பார்க்கிறது என்பதை எளிதில் கண்டுகொள்ள இயலும்.

எனில் மகாவம்சத்தின் சிக்கல் என்ன?

மகாவம்சம் தமிழர் வரலாற்றை திரிக்கவில்லையே தவிர பௌத்தத்தை ஆதரிக்காத எந்த ஒரு அரசனையும் பற்றி நிறைவாக கூறவில்லை.

ஆதலால் பௌத்தத்தை தமிழ் மன்னர்கள் அதிகம் ஆதரிக்காதலால் மகாவம்சம் தமிழர் வரலாற்றைத் தவிர்க்கிறது.
இதனால் வரலாற்றாய்வாளர்கள் இலங்கையை "சிங்களவருக்கு முன்னர் பன்னெடுங்காலத்துக்கு முன்னரே ஆண்ட தமிழர்கள்" வரலாற்றை ஆராய வேண்டுமெனில் மகாவம்சம் மட்டும் தான் ஆதாரம் என்று நம்புவது தற்காலத்தில் மூடநம்பிக்கையே ஆகும். 

அதேசமயம் அது தமிழர் வரலாற்றை திரிக்கிறது என்று கூறினாலும் அதுவும் மூட நம்பிக்கையே ஆகும்.

Wednesday 26 June 2013

அப்பாத்துரையார் கொடுத்த தவறான தகவல்

அப்பாத்துரையார் தான் எழுதியதென்னாட்டுப் போர்க்களங்கள் நூலில் பின் வருமாறு குறிப்பிட்டிருந்தார்.

//ஜய நகரம், சுந்தர பாண்டியன் என்ற பெயர்களை உட்கொண்ட கல்வெட்டும் ஒன்று உளது. ‘ஜய நகர சுந்தர பாண்டிய தேவாதீசுவர நாம ராஜாபிஷேக’ என்பது அதன் வாசகம் ஆகும். ‘பாண்டிய’ என்ற பெயருக்கேற்ப இந்தக் கல்வெட்டில் மீன் இலச்சினையும் காணப்படுகிறது. //

அதாவது நமது தமிழக பாண்டியர்கள் அங்கே ஆண்டார்கள் என்பது போல் இருக்கும் அவர் வாதம்.

ஆனால் இந்த கல்வெட்டு செய்தி கூறும் மன்னர் மரபு தமிழகத்தை ஆண்ட பாண்டியர் மரபல்ல என்பது ஒரிசா பாலு அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நான் இணையத்தில் தேடி அறிந்து கொண்டேன். மேலும் இக்கல்வெட்டு கூறும் மன்னன் யாரென ஆராயுங்கால் அது சாவக நாட்டின் மச்சபாகீத பேரரசின் ஜெயநேகரன் (1309 - 1328என்பது தெரிய வரும்.

இவனுக்கு பின்வரும் மூன்று பெயர்கள் உண்டு.

1. ஜெயநேகரன்
2. ஸ்ரீ மகாராஜ வீரலந்தகோபால ஸ்ரீ சுந்தர பாண்டிய தேவாதீசுவரன்
3. காலஜெமெத்

அப்பாத்துரையார் குறித்த சுந்தர பாண்டிய என்னும் கல்வெட்டு இச்சாவக மன்னனையே குறிக்கிறதே அன்றி தமிழக பாண்டியர்களை குறிப்பதல்ல.

நிற்க

மச்சபாகீத பேரரசின் முதலாவது மன்னன் தன் கல்வெட்டுகளில் பாண்டியன் என்ற பெயரை சேர்த்துக் கொள்ளவில்லை. மீன் சின்னத்தையும் ஏற்றவில்லை. ஆனால் இந்த இரண்டாம் மன்னன் மட்டும் ஏன் சுந்தர பாண்டியன் என்ற ஒட்டுப் பெயரையும் மீன் சின்னத்தையும் தன் கல்வெட்டுகளில் பொறித்தான் என அலசிய போதுதான் பாண்டியர்களின் 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கூறும் செய்திகள் பலவற்றின் பொருள் பொதிந்த உண்மையை நான் அனுமானித்தேன்.

வரலாறு விரியும்.

Wednesday 19 June 2013

சீனத்துக்கு பாண்டியன் தூது

தமிழர் வரலாற்றில் ஆர்வமுடையோர் பலருக்கு சோழர்கள் சீன நாட்டிற்கு தூதனுப்பியதை நன்கு தெரிந்திருக்கலாம். நான் படித்த முக்கிய வரலாற்று ஆர்வலர்கள் எழுதிய ஆய்வு நூல்களில் இதைக் குறிப்பிடாமல் இருக்க மாட்டார்கள். ஒருவேளை படிப்பவர்களுக்கு தெரியாமல் இருந்தால் விக்கிப்பிடியாவில் சில நூல்களில் இருந்து தொக்குத்து எடுத்த தகவல்களை பின்வரும் இணைப்பில் எழுதியிருக்கிறேன். பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

http://ta.wikipedia.org/s/1yx - சோழர்களின் சீனத் தொடர்பு

ஆனால் பாண்டியர் வரலாறு பற்றி தனியாக எழுதப்பட்ட நூல்களில் கூட பாண்டியர்களுக்கும் சீனர்களுக்கும் இடையில் ஏறக்குறைய 5 முறை தூதுக்குழுக்கள் வந்துள்ளதை எழுதவில்லை.

முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்

http://ta.wikipedia.org/s/cks

இவனைப் பற்றிய ஓரளவு குறிப்புகளை மேற்கொடுத்த விக்கிப்பீடியாவின் இணைப்பு வழி அறியலாம்.  இவன் ஆட்சிக்காலத்தில் பாண்டிய நாடு (அப்போதைய பாண்டிய நாடு என்பது மூவேந்தர் அரசுகள், வட இலங்கை, தெற்கு கர்நாடகம், ஆந்திரம் வரை பரவியிருந்தது அறியப்பட்ட வரலாறு. இவனது சித்தப்பனான வீர பாண்டியன் சுந்தர பாண்டியன் ஆணையின் பேரில் ஜாவா, காடாரம், சீனாவில் சில பகுதிகள், தாய்லாந்து போன்றவற்றை வென்றான் அன்பது அறியப்படாத ஆவணப்படுத்த வேண்டிய வரலாறு.கி.பி 1268 முதல் கி.பி 1311 வரை இருந்த இவனது ஆட்சியில் தமிழகம் உலகு எங்கிலும் காணாத ளவுக்கு சீரும் சிறப்பும் பெற்றிருந்ததாக மார்க்கோ போலோ போன்ற வெளிநாட்டுப் பயனிகள் கூட குறித்துள்ளனர். ஆனால் இதைப் பற்றி எவரும் வரலாற்று நூலில் பெரிதாக கூறவில்லை.

மேலும் இவன் சார்பில் ஜமாலுதீன் என்ற அமைச்சரின் கீழே ஒரு தூதுக் குழு கி.பி.1280ல் சீனாவி
ல் உள்ள ஒரு மன்னனை சந்தித்தது. ஏதோ ஒரு உடன்படிக்கை ஏற்பட்டிருக்க வேண்டும். 

அதையேற்ற அம்மன்னன் யாங்திங் பீ என்ற தன் அவையில் இருந்து ஒரு தூதுவரை அனுப்பி வைத்தான்.  யாங்திங் பீ   கி.பி.1282ல்  பாண்டிய நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் குறிப்புகள் ஏதும் உள்ளனவா?

பின் 1283ல் பாண்டி நாட்டில் இருந்து ஒரு குழுவும் 

சீனத்தில் இருந்து ஒரு பதில் குழுவும் 

பிற்பாடு பாண்டிய நாட்டில் இருந்து ஒரு குழு 1984ல் சென்றது வரை குறிப்புகள் உண்டு.

ஆனால் இதன் குறிப்புகள் ஏன் அதிக வரலாற்று நூல்களில் சொல்லப் படவில்லை.

ஜய நகர சுந்தர பாண்டிய தேவாதீசுவர நாம ராஜாபிஷேக 

மேலுள்ளது முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஜாவக நாட்டை வென்ற கல்வெட்டு - இந்தோனேசிய சாவக சுமத்ரா தாய்லாந்து பகுதிகளில் உள்ள ஏதோ ஒரு நாட்டில் இது உள்ளது. கா. அப்பாத்துரையார் எழுதிய நூல் மட்டும் இதைக் குறிப்பிடுகிறது. ஆனல் இக்கல்வெட்டு எங்குள்ளது என இன்னும் தெரியவில்லை. பாண்டியர் மெய்கீர்த்திகளில் முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனும், முதலாம் சடயவர்மன் சுந்தர பாண்டியன் கீழ் அவனது தம்பி வீர பாண்டியனும் சீனம், காடாரத்தை வென்றதாக குறிப்புகளுண்டு. ஆனால் இதை தமிழர்கள் கண்டுகொள்ளவே மாட்டார்கள்.