Thursday, 27 June 2013

மகாவம்சம் தமிழர் வரலாற்றை திரிக்கிறதா? தவிர்கிறதா?

நான் படித்த வரலாற்று ஆய்வு நூல்களில் மகாவம்சம் தமிழர் வரலாற்றை மறைப்பதாகவும் திரிப்பதாகவும் சிங்களவர் வரலாற்றை மட்டும் ஏற்றிச் சொல்வதாகவும் நிறைய தமிழ் ஆய்வாளர்களும் ஆர்வளர்களும் எழுதப் பார்த்திருக்கிறேன். ஆனால் என் கருத்து யாதெனில் மகாவம்சத்துக்கு தமிழர் சிங்களவர் என்ற கண்ணோட்டம் கிடையாது என்பதே. ஆனால் நான் படித்தது அனைத்துமே களப்பிரர் காலத்துக்கும் அதற்கும் முற்பட்ட மகாவம்சப் பாடல்களின் மொழி பெயர்ப்பையே ஆகும். (Before 550 AD)

இதை பின்வரும் மூன்று அனுமானங்கள் மூலம் கூறுகிறேன். ஏறக்குறைய மகாவம்சத்தின் வரலாற்றுப் பாணியும் இதைப் போன்றுதான் உள்ளது. மகாவம்சம் மன்னர்களை மூன்று விதமாக பிரிக்கிறது. அதற்கு ஏற்ப வரலாற்றுத் தகவல்களையும் தருகிறது.

1. பௌத்தத்தை மட்டும் ஆதரிக்கும் துட்டகைமுனு போன்றவர்கள்

துட்டகைமுனுவின் வரலாற்றை மகாவம்சம் மிக விரிவாகவே கூறுகிறது. அதன் அளவைச் சொல்ல வேண்டுமானால் துட்டகைமுனு எல்லாளச் சோழனை விட குறைவான ஆட்சி ஆண்டுகளையே கொண்டவன். ஆனால் எல்லாளனை விட இவனைப் பற்றி வரலாறுகள் மகாவம்சத்தில் அதிகம்.

2. எல்லாளனைப் போல மற்ற மதங்களையும் பௌத்தத்தோடு ஆதரித்தவர்கள். இவர்கள் பௌத்தம் பால் எந்த எதிர்போக்கையும் கொண்டவர்கள் அல்ல. அதே சமயம் இவர்கள் பௌத்தத்தை மட்டும் ஆதரிப்போரும் அல்ல.

இந்த இரண்டாம் பிரிவு மன்னர்களைப் பற்றி மகாவம்சம் ஓரளவு செய்திகளை கூறுகிறது.

3. பௌத்தத்தை ஆதரிக்காதவர்கள்.

கி.மு. நாலாம் நூற்றாண்டு முதல் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை உருகுணை பகுதிகளை ஒரு பாண்டியர் குலத்தோர் ஆட்சி செய்துள்ளனர். இவர்களின் கல்வெட்டுகளில் இவர்கள் கொடுத்த நில தானத்தை பார்க்கும் போது இவர்கள் ஆரம்பக் காலங்களில் பௌத்தம் இலங்கையில் அறவே இல்லை. அதனால் இவர்கள் பற்றிய தரவை மகாவம்சம் தரவே இல்லை.

தமிழர் வரலாறு மகாவம்சத்தில் திரிக்கப்படுகிறதா?

நிச்சயம் இல்லை. இதை பின்வரும் தகவல்கள் உறுதிப்படுத்தும்.

1. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் ஆறு பாண்டிய மன்னர்கள் ஏறக்குறைய 40 வருடங்கள் இலங்கையை ஆண்டுள்ளனர். இவர்களில் இருவர் பௌத்தத்தை ஆதரித்ததாக கல்வெட்டுகள் உள்ளன. இவர்களை பற்றிய வரலாறை மகாவம்சம் நிரம்பவே கூறுகிறது.

2. பல மதங்களை ஆதரித்த எல்லாளனைக் கூட மகாவம்சம் நல்ல முறையில் ஆட்சி செய்தான் என்றே கூறுகிறது. இங்கும் திரிக்கவில்லை.

3. உருகுணையை ஆண்ட பாண்டியர் குலத்தின் கடைசி பெண்ணான சவரை என்ற பெண் துட்டகைமுனுவின் தகப்பனான காக வண்ண தீசனின் முதல் மனைவி. இவள் பௌத்த மத தானங்களை அதிகம் செய்தவள். இவளைப் பற்றித் தகவலையும் மகாவம்சம் தருகிறது.

(காகவண்ண தீசனின் இரண்டாம் மனைவியே விகாரமாதேவி ஆவாள். இவர்களின் புதல்வனே துட்டகைமுனு.)

ஆக இதிலிருந்தே மகாவம்சம் தமிழனா சிங்களனா எனப் பார்ப்பதில்லை எனவும் பௌத்தத்தை ஆதரித்தவனா இல்லையா என்பதை மட்டுமே பார்க்கிறது என்பதை எளிதில் கண்டுகொள்ள இயலும்.

எனில் மகாவம்சத்தின் சிக்கல் என்ன?

மகாவம்சம் தமிழர் வரலாற்றை திரிக்கவில்லையே தவிர பௌத்தத்தை ஆதரிக்காத எந்த ஒரு அரசனையும் பற்றி நிறைவாக கூறவில்லை.

ஆதலால் பௌத்தத்தை தமிழ் மன்னர்கள் அதிகம் ஆதரிக்காதலால் மகாவம்சம் தமிழர் வரலாற்றைத் தவிர்க்கிறது.
இதனால் வரலாற்றாய்வாளர்கள் இலங்கையை "சிங்களவருக்கு முன்னர் பன்னெடுங்காலத்துக்கு முன்னரே ஆண்ட தமிழர்கள்" வரலாற்றை ஆராய வேண்டுமெனில் மகாவம்சம் மட்டும் தான் ஆதாரம் என்று நம்புவது தற்காலத்தில் மூடநம்பிக்கையே ஆகும். 

அதேசமயம் அது தமிழர் வரலாற்றை திரிக்கிறது என்று கூறினாலும் அதுவும் மூட நம்பிக்கையே ஆகும்.

1 comment:

  1. மகாவம்சம் தமிழனா சிங்களனா எனப் பார்ப்பதில்லை எனவும், பௌத்தத்தை ஆதரித்தவனா இல்லையா என்பதை மட்டுமே பார்க்கிறது என்பதை எளிதில் கண்டுகொள்ள இயலும்.

    மகாவம்சம் பௌத்தத்தை ஆதரிக்காத எந்த ஒரு அரசனையும் பற்றி நிறைவாக கூறவில்லை.

    பௌத்தத்தை அதிகம் ஆதரிக்காத தமிழர் வரலாற்றை மகாவம்சம் தவிர்க்கிறது.

    இலங்கையை "சிங்களவருக்கு முன்னர் பன்னெடுங்காலத்துக்கு முன்னரே ஆண்ட தமிழர்கள்" வரலாற்றை ஆராய வேண்டுமெனில், மகாவம்சம் மட்டும் தான் ஆதாரம் என்று நம்புவது மூடநம்பிக்கையே ஆகும்.

    இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பௌத்தத்தை, உலகமே போற்றுவதற்கு, அந்த அசோகரும் - The Great போற்றுவதற்கு, எல்லாளரும் - The Great போற்றுவதற்கு, ...

    ReplyDelete