Friday 9 August 2013

கூர்ங்கோட்டவர் என்றால் என்ன?

கூர்ங்கோட்டவர் என்பது நான் நீண்ட நாட்களாக எழுத நினைத்திருக்கும் 18 கதைகளின் தொடர் புதினத் தலைப்பு. இதில் கூர்ங்கோட்ட என்பது கூர்மையான தந்தங்களை உடைய யானை என்னும் பொருள்படும். அர் என்னும் விகுதி கூரிய தந்தங்களை உடைய யானையைக் கொண்டவர்கள் அல்லது யானைப்படையை கொண்டவர்கள் என்று பொருள் தரும். உலகின் முதற்குடியாம் தமிழ் குடி அதில் மிகவும் பண்டைய குடியாம் பாண்டியரிடத்தே மிகப்பெரியளவில் கரிப்படை இருந்தது. இந்த தொடர் புதினத்தின் 18 பாகங்களுமே 18 பாண்டிய மன்னர்களை கூற விளைபவை. அதனால் வள்ளுவர் காட்டிய சொல்லையும் (கூர்ங்கோட்ட ) என் கற்பனையின் விகுதியையும் சேர்த்து இந்த பெயரை உருவாக்கினேன். அவை பற்றிய விவரம் கீழே.

 1- 6. முதல் ஆறு பாகங்கள். இவை தொன்மங்களிலும் புராணக்கதைகளிலும் கூறப்படும் மிகைப்படுத்தப்பட்ட வரலாறுகளை உடைய பாண்டியர்கள் பற்றியது. இவற்றில் காணப்படும் அனைத்தும் வராலாற்று ஆதாரங்களுக்கு புறம்பானவை. ஆனால் கதை என்று வருமிடத்தில் இதில் பல கற்பனைகளை சேர்த்து பார்த்து நாம்  மகிழலாம். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் "Mummy"  ''Lord of The Rings'' போன்ற கதைத் தண்மை கொண்டவை.

7 - 9 ஏழில் இருந்து ஒன்பதாவது பாகம் வரை இவை சங்க காலப் பாண்டியர்கள் பற்றியது. இவற்றில் வரும் ஒவ்வொரு தனித்தனி வாக்கியமும் வரலாற்று உண்மை. ஆனால் அடுத்துவரும் வாக்கியத்தை இணைத்துப் பார்த்தால் அவை என்னுடைய ஊகமாய் இருக்கும். உதாரணம் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்பவன் இருந்தது உண்மை. உக்கிரப் பெருவழுதி என்னும் அரசன் இருந்ததும் உண்மை. ஆனால் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனுக்கு பிறகு உக்கிரப் பெருவழுதி ஆண்டான் என்றால் அது என ஊகம்.

10 - 18 அடுத்த மூன்று மூன்று மூன்று கதைகளும் முறையே முதலாம் பாண்டியப் பேரரசை சேர்ந்த 3 பாண்டியர்களையும், இரண்டாம் பாண்டியப் பேரரசை சேர்ந்த 3 பாண்டியர்களையும், தென்காசி பாண்டியர்கள் மூவரையும் பற்றியவை. இவற்றில் கூறப்படும் பெரும்பாலான சம்பவங்கள் உண்மையானவையே.

இந்த 18 பாகங்களில் ஏழில் இருந்து 15ஆவது பாகம் வரை மூலக்கதையை நான் ஏற்கனவே தயார் செய்து வைத்தவை. மற்றவை எல்லாம் ஒரு வரிக்கதைகளாகவே தற்போது வரை இருக்கிறது. 7, 10-15 ஆகிய ஏழு கதைகளுமே ஈழத்தை பாண்டியர்கள் ஆண்டதைக் கொண்டு மையமாக வைத்து சித்தரிக்கப்பட்டவை.

கதை உருவாக்கத்தின் பின்னணி

நான் அடிப்படையில் இந்தியர் பற்றிய பண்டைய வரலாற்றையும் போர் முறைகளையும் திரைப்படங்களாக்கி இந்தியர் புகழை உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் பரப்ப வேண்டும் என்று என் சிறுவயதில் நினைத்தவன். அதற்கு வட இந்தியர் வரலாற்றை மட்டுமே வரலாற்று பாடங்களாய் அமைத்த தமிழ்நாடு அரசே காரணம். வீட்டில் திரைப்பட தொழில்நுட்பம் குறித்த பட்டயத்தை பத்தாவது முடித்தவுடன் படிக்க வேண்டும் என்று கூறியதும் கடும் எதிர்ப்பை சந்திக்க நேர்ந்தது. அதனால் வழியில்லாமல் இயந்திரவியல் பட்டயம் படித்தேன். அதற்கும் கூட என் நண்பர் ஒருவர் இயந்திரவியல் பட்டயத்தில் நீ படிக்கும் மென்பொருள்கள் சில மாயா போன்ற திரைப்பட வரைகலை மென்பொருட்களின் அடிப்படையை கொண்டிருக்கும் எனக் கூறியதே. அதனால் நான் இயந்திரவியலை பட்டயமாக கோயம்புத்தூர் தொழில்நுட்ப கழக தொழிலிடை பல்தொழில்நுட்ப கல்லூரியில் படித்தேன். DME Sandwich in CIT sandwich polytechnic college

அப்படிப்பை நிறைவு செய்யும் வேளையில் எனக்கு "பொள்ளாச்சி பாலு" என்ற திரைப்படத் துறை மக்கள் தொடர்பாளரிடம் என் நண்பர்கள் பழக்கம் ஏற்படுத்தித் தந்தனர். அவரின் வேலை யாதெனில் ஒரு திரைப்படக் காட்சிக்கு அதிக மக்கள் கூட்டத்தை காட்ட வேண்டும் என்றால் அவரின் மூலம் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மக்களில் ஒரு கூட்டததை திரட்டிக் கொள்வர். ஆணாய் இருந்தால் ஒரு நாளுக்கு 100 ரூபாயும் பெண் என்றால் 150 ரூபாயும் அத்தொடர்பாளர் மூலம் காட்சியில் நின்றால் எங்களுக்கு கிடைக்கும். இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி "காதலில் விழுந்தேன்", "கணபதி சில்க்ஸ்", "மலயாளப் படமான எஸ். எம். எஸ்.", "பாராசூட் விளம்பரம்" போன்ற விளம்பரங்களிலும் திரைப்படங்களிலும் நடக்கும் படப்பிடிப்பு காட்சிகளுக்கு நேராகச் சென்று படம் எடுக்கும் முறை எப்படி என்றெல்லாம் பார்த்துக் கொண்டேன். அந்த மக்கள் தொடர்பாளரிடம் கேட்ட போது தான் எனக்கு போர் திரைப்படங்களை எல்லாம் எடுக்க 2020களில் 300 கோடி ரூபாய் செலவாகும் எனத் தெரிய வந்தது. நான் பட்டயம்  முடித்த பிறகும் கூட இந்திய வரலாறுகளை படிப்பதிலேயே என் ஓய்வு நேரத்தைச் செலுத்தினேன்.

பிற்பாடு இளநிலை இயந்திரப் பொறியியல் படிக்க காஞ்சிபுரத்தின் சங்கரா பல்கக்கலைக்கழகத்தில் (SCSVMV UNIVERSITY) சேர நேர்ந்தது. மகாபாரதம், இராமாயணம் போன்றவற்றின் காலக்கணிப்புகளை எல்லாம் அறிந்து கொள்ள தொன்மவியல் ஆய்வாளர் மகாலிங்கம் எழுதிய பண்டைய பாரதம் (Ancient India) படித்த போதுதான் குமரிக்கண்டம் பற்றித் தெரிய வந்தது. பாண்டியர் வரலாற்றின் மீது ஆர்வமும் எழுந்தது. அதனால் பாண்டியர் பற்றிய தொன்மக் குறிப்புகளில் இருந்து வரலாற்றுக் குறிப்புகள் வரையும் அனைத்தையும் படிக்கத் தொடங்கினேன். அதுவரையிலும் என் சொந்த ஊராம் தென்காசியின் பெரிய கோயிலை கட்டியது பாண்டியன் என்று மட்டுமே தெரியுமே தவிர அவர்களுக்கு என்று அங்கு ஒரு சிற்றரசு மூன்று நூற்றாண்டுகள் இருந்தது என அறவே தெரியாது. அதை படித்ததில் இருந்தே எனக்கு மனதில் ஒரு நெருடல். மகாபாரதம், இராமாயணம் என வட இந்திய புராணக் கதைகளும் இதிகாசங்களும் தமிழர்களின் தலைவன் என்று சொல்லிக் கொள்(ல்)வோர் ஆதிக்கம் செலுத்தும் ஊடகங்களில் எல்லாம் காட்ட படுகிறது. அதுவும் பல தயாரிப்பு நிறுவனங்கள் நடத்தும் ஒவ்வொரு இதிகாச புராணங்களையும் தமிழ் தொலைக்காட்சிகளிலும் தொடர்ந்து காட்சிப்படுத்தினர்.

ஏன் என் பெற்றோரோ தமிழ் ஊடகங்களோ தொன்மத்தில் கூறப்படும் தமிழர் பற்றியும் சங்க இலக்கிய மன்னர்கள் பற்றியும் பிற்கால அரசர்கள் பற்றியும் தென்காசியை 3 நூற்றாண்டுகள் தலைநகரமாக கொண்டு ஆண்ட தென்காசிப் பாண்டியர்கள் பற்றியும் காட்சிப் படுத்தவோ சொல்லிக் கொடுக்கவோ இல்லை. இந்த அலட்சிய மனப்பான்மை ஏன் எனத் தெரிந்து கொள்ள மேலும் வரலாற்று நூல்களை படித்த போதுதான் தமிழர்களின் வரலாறு மட்டும் தொடர்ந்து மறைக்கப்படுவதுடன் அதைப் போற்ற வேண்டிய தமிழர்களே அதை நம்பாமலும் தாழ்வு மணப்பாங்கில் துவண்டு கிடக்கின்றனர் என்பதையும் தெளிவாகப் புரிந்து கொண்டேன்.

அதற்கும் மேலாக இந்திய அரசே துணை நின்று நடத்திய ஈழத்தமிழர் படுகொலை, நீர் பங்கீட்டில் காட்டிய அலட்சியப் போக்கு, தமிழக மீனவர்கள் தொடர் படுகொலை, தமிழ் வரலாற்று ஆய்வாளர்களும் தொல்லியலாளர்களும் கேளிக்கு உட்படுத்தப்பட்டமை இவை அனைத்தும் சேர்ந்து இந்திய வரலாற்றில் குவிந்து கிடந்த என் ஆர்வத்தை ஈழத்தமிழர் வரலாற்றிலும் தமிழர் வரலாற்றிலும் திருப்பின. அதில் இருந்து ஈழம், தமிழகம், தமிழ் மன்னர்கள் போன்றவை தொடர்பாக வந்த புதினங்கள், வரலாற்று தொல்லியல் இலக்கிய நூல்கள் அனைத்தையும் படிக்கத் தொடங்கினேன்.

தமிழர் வரலாற்றை மூலை முடுக்குகளிலும் கொண்டு செல்ல திரைப்படம் என்ற ஊடகத்தால் மட்டுமே முடியும். ஆனால் படித்தவர்களும் விவரம் தெரிந்தவர்களும் கூட தமிழர் வராலாற்றைக் கூறினால் அதை நம்பாமலும் கேளி பேசியும் வந்தனர். இவர்களைத் தடுப்பதற்கு இரண்டே வழிகள் தான். ஒன்று தமிழர் வரலாற்றை பின்னுக்குத் தள்ளும் முந்து அசோகப்பிராமி கொள்கை, கயவாகு காலம்காட்டி முறைமை, தமிழக தாழிகளின் காலத்தை வரலாற்றாளர்களும் தொல்லியலாளர்களும் கணிப்பதற்கு கையாண்ட முறைகள் அனைத்திலும் உள்ள புகுத்தப்பட்ட இடைவெளிகளையும் கோளாறுகளையும் தகர்க்க வரலாற்று நூல்கள் எழுதுதலும், அதை அனைவரும் அறிந்து கொள்ளும் படியான திரைப்படங்கள் இயக்குவதுமே.

தற்போதைய பொருளாதார சூழல்களில் போர் திரைப்படம் என்பது மிகச் சிரமமான காரியம். அதனால் திரைப்படம் எடுக்கும் அளவிற்கு ஒரு புதினம் எழுதிவிட்டால் அதை பின்வருபவர் எவராவது திரையில் கொண்டுவருவார் என்ற நம்பிக்கையில் இந்த புதினங்களை எழுதத் தொடங்கியது. வரலாற்று ஆய்வும் இன்னொரு தளத்தில் சென்று கொண்டே தான் இருக்கிறது.

பொன்னியின் செல்வன் பீலியா

தமிழர் வரலாற்று புதினங்கள் என்றாலே சோழப் பேரரசர்களின் ஆதிக்கம் தான். பாண்டியர் சிங்களவரிடம் தன் மணிமுடியைக் கொடுத்ததால் அதை ஒரு சாக்காக வைத்தே பாண்டியர்களை தாழ்த்தி விட்டனர். அந்த மணிமுடியைக் கொடுத்த காரணமோ அரசியல் சூழ்நிலைகளோ வேறு எவர் சந்தித்து இருந்தாலும் அதையே செய்திருப்பார்கள். அது தவிர்த்து முதலாம் பாண்டியப் பேரரசை ஏற்படுத்தியவர்கள் மூவர் சிங்களத்தையும் தன் கட்டுக்குள் வைத்திருந்தனர். மேலும் சிங்களம் கடல் கடந்து இருக்கும் நாடு. அதுவும் மணிமுடி ஒளித்து வைத்த இடமோ உருகுணை என்ற அடர்ந்த காடுகளைக் கொண்ட குறிஞ்சி முல்லை நிலம். அதனால் பாதுகாப்பு கருதியே இத்தகைய ஒரு செயலை பாண்டியன் செய்ய நேர்ந்தது. பாண்டியர்கள் சிங்களத்தை அடக்கி ஆண்ட வரலாற்றையும் புதினங்கள் தந்திருந்தால் இந்த பழிச்சொல்லுக்கு அவர்கள் ஆளாகி இருக்க மாட்டார்கள். வரலாற்று ஆய்வாளர்களுக்கு தெரியும் ஏன் பாண்டியன் தன் மணி முடியை அங்கு ஒளித்தான் என்று. ஆனால் அதை படிக்கும் வரலாறு மேல் அக்கறை இல்லாத சாதாரண மனிதர்கள் உணர்ச்சி வசப்பட்டு பாண்டியரை தவறாகவே எண்ணுவர்.

விதிவிலக்காக வந்த பாண்டியன் பவணி, கயல்விழி, இராஜமுத்திரை போன்ற பாண்டியர்களை மையப்படுத்திய புதினங்களும் மற்ற தமிழ் அரசர்களுடன் பாண்டியன் போரிட்டதையே சித்தரித்தன. கயல்விழி "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்" என்ற படமான போதும் கூட பாண்டியர்க்கு கிடைக்க வேண்டிய புகழ் அனைத்தையும் இராமச்சந்திரன் பெற்றுக்கொண்டார். இந்த பதினெட்டு புதினங்களும் பாண்டியர் பற்றிய அனைத்து பெருமைகளையும் கொண்டிருப்பதுடன் பாண்டியரால் தமிழும் தமிழரும் பீடு நடை போட்டதை நிச்சயம் எடுத்துக் காட்டும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

இளைய ராயினும் பகையரசு கடியுஞ்
செருமாண் தென்னர் குலத்துக்கு 

தமிழ் வரலாற்று புதினங்கள் வாயிலாகவே ஒரு இழுக்கு நேருமாயின் அதை பார்த்துக்கொண்டு தென்பாண்டி நாட்டில் பிறந்த நான் புதினம் எழுதும் நோக்கத்தையும் வைத்துக் கொண்டு சும்மா இருந்தால் தகுமா? அதனால் பாண்டியர் புகழ் பாடும் 9 புதினங்களுக்கான முன்னோட்டத்தை (Trailor) முகநூலில் விடப்போகிறேன். ஆர்வம் உள்ளவர் முகநூல் பக்கத்தில் உங்கள் கருத்துக்களை முன்வைக்கவும்.

https://www.facebook.com/Koorngotavar

4 comments:

  1. தமிழர்களின் வரலாறு மட்டும் தொடர்ந்து மறைக்கப்படுவதுடன் அதைப் போற்ற வேண்டிய தமிழர்களே அதை நம்பாமலும் தாழ்வு மனப்பாங்கில் துவண்டு கிடக்கின்றனர் என்பதையும் தெளிவாகப் புரிந்து கொண்டேன்.


    இந்த நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் செங்கோன் தரைச்செலவு, மூவடி முப்பது ஆகிய பழைய நூல்களைக் கண்டுபிடித்துவிட்டதாகப் புலவர் ஒருவர் அச்சிட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

    செங்கோன் தரைச் செலவு, மதுரைச் சுந்தர பாண்டியன் ஓதுவார் என்பவரால் பழைய ஏட்டுப்பிரதிகளிற் காணப்பட்டதென்று கூறி 1902ஆம் ஆண்டிற் பதிக்கப்பட்டது. இதில் அடங்கிய பாடல்கள் ஏழு.

    செங்கோன்-றரைச் செலவு’ என்ற சிறு நூலொன்று உரையுடன் மதுரையில் அச்சிடப்பட்டு வெளி-வந்தது. தாப்புலிப்பா’ என்ற யாப்பினால் இயன்றது.

    உலக வரலாற்றிலேயே முதல் பயணநூல் இதுதான்.

    எண்ணற்ற நூல்கள் காலச் சக்கரத்தில் சிக்கி அழித்து விட்ட போதிலும் சில நூல்கள தற்போது் நமக்கு முழுமையாகவோ அல்லது சிதைந்தோ கிடைத்திருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.

    கோவை துடிசைமணிக் கிழார் சிதம்பரனார் அவர்கள் பழைய ஏடுகளுடன் செங்கோன் தரைச் செலவின் 20 பாடல்கள் (உரையின்றிக்) கிடைத்தனவென்று கூறுகின்றனர்

    அந்நூற் பாடல்கள் வெவ்வேறு இடங்களில் பழைய ஏடுகளிடையே காணப்பட்டமையின், அந்நூலின் பழமையைக் குறித்து ஐயுறுதல் வேண்டா என்றும் சொல்லப்படுகிறது.

    தாங்கள் செங்கோன் தரைச்செலவு / மூவடி முப்பது ஆகிய அந்த நூற்களை எவ்வாறேனும் தேடிப் பார்த்து அனுப்பி உதவுமாரு அன்புடன் வேண்டுகிறேன்.

    தங்களின் மின்னஞ்சல் முகவரி என்ன? எனது மின்னஞ்சல் முகவரி gvetrichezhian@hotmail.com

    ReplyDelete
  2. பாண்டியர்கள் சந்திர வம்சத்தை சேர்ந்தவர்களே.. அதை மறந்துவிட்டீர்களா? பாண்டியம் கௌரவர்களுக்காக குருக்ஷேத்திரத்தில் போர் செய்து வீர மரணம் அடைந்தது பற்றி மகாபாரதத்திலேயே வந்திருக்கிறதே.. அதை ஏன் யாரும் பேசவில்லை?

    ஆரியர்-தமிழர் என்ற பேதத்தை திராவிட கட்சிகள் உருவாக்கியதை தாண்டி உங்களால் சிந்திக்க முடியவில்லையா?

    வரலாறு என்றாலே ஒரு நாடு இன்னொரு நாட்டை அடக்கி ஆண்ட கதையாகவே ஏன் கருத் வேண்டும்?

    பாண்டியர்களுக்கு சிங்களவர்களுக்கும் ஏற்பட்டிருந்த திருமண பந்தத்தை ஏன் மறந்துவிட்டீர்கள்?

    பாரதம் முழுதுமே சத்திரிய வம்சம் சொந்தங்களாகவே இருந்துள்லது.. எல்லாரும் தொடர்புடையவர்களே..

    கிருஷ்ணரின் மதுராவும், பாண்டியனின் மதுரையும், இருவரும் சந்திர வம்சம் என்பதும் தொடர்பில்லாமல் இருக்கும் என்றா நினைக்கிறீர்கள்?

    ReplyDelete
  3. ஐயய்யோ செந்தில் ராஜா. நீங்கள் புறாக்கதை நம்புகிற ஆள் என்றால் இங்க வர வேண்டாம். பஆண்டியர் சந்திர குலம் சோழர் சூரிய குலம் என்பது எல்லாம் சிலப்பதிகாரம், மணிமேகலை எழுதப்பட்ட காப்பிய கால்ங்களில் தான் தொடங்கியது. சிங்களன் என்ற ஒரு இனம் கி.மு. 500களுக்கு முன் கிடையாது. எனில் மகாபாரதம் எழுதப்பட்டது அதுக்கு பிறகு தான். சமஸ்கிருதக் கல்வெட்டு முதலில் காணப்படுவதே கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தான். தமிழரின் மிகப்பழைய நூல்களான தொல்காப்பியம், பத்துப்பட்டு, எட்டுத்தொகை நூல்களில் மூவேந்தர் சூரிய சந்திர குலமாக எல்லம் வரவே இல்லை. புராணங்களில் சோழர் சந்திரவம்சமாகத்தான் குறிக்கப்படுவர். அது தெரியுமா? இந்த சந்திர சூரிய அக்னி குலம் என்பது எல்லாம் பல்லவர் தங்கள் செப்பேடுகளில் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு போடுவதைப் பார்த்து மூவேந்தர் போட்டுக் கொண்டது.

    ReplyDelete
    Replies
    1. ஐயா தென்காசி சுப்பிரமணியன் அவர்களே, தங்களுடைய தொடர்பு எண் வேண்டும்.

      Delete