Friday 27 December 2013

கச்சமும் களிறும் கயலும் குதிரையும் கொண்ட கவுரியர் காசுகள்

கச்சம் - ஆமை

களிறு - யானை

கயல் - மீன்

கவுரியர் - பாண்டியர்

இவ்வளவு விளக்கம் எதற்கு?

காரணம் பல இருக்கு.

களிறு

மொழிப்பெயர் தேயத்தில் (பண்டைய தமிழகமும் ஈழமும்) யானையை சின்னமாக கொண்டு காசுகளைப் பொறித்த மன்னர்கள் யார்? யார்?

முதலில் பாண்டியர்.

இரண்டாவது சேரர்.

மூன்றாவது மஜ்ஜிமகாராசனின்  வழிவந்த உருகுணையை ஆண்ட மன்னர்கள். என் மொழியில் உருகுணை பாண்டியர்கள். இவர்கள் மட்டுமே களிற்றுக்காசுகளை வெளியிட்டார்கள்.

சோழர் புலியையும் வேறு சின்னங்களைக் கொண்டும் சிங்களவர் சிங்கமும் வேறு சின்னங்களைக் கொண்டும் காசுகளை வெளியிட்டார்கள்.

கயல்

கயல் பொறித்தக் காசுகளை பாண்டியர் மட்டுமே பண்டைய மொழிப்பெயர் தேயத்தில் வெளியிட்டனர்.

கச்சம் - ஆமை

கச்சம் பொறித்தக் காசுகளை பாண்டியர் மட்டுமே பண்டைய மொழிப்பெயர் தேயத்தில் வெளியிட்டனர்.

குதிரை

குதிரையைச் சின்னமாகப் பொறித்துக்கொண்டு அனைவருமே காசுகளை வெளியிட்டார்கள். குறுநில மன்னர்களான மலையமான்கள் கூட குதிரை முத்திரையோடு காசுகளை வெளியிட்டார்கள்.

மன்னர்கள் மட்டும் தான் காசுகளை வெளியிட்டார்களா?

நிச்சயம் இல்லை வணிகர்களும் இட்டார்கள். ஆனால் அவற்றுள் யானையை சின்னமாக வைப்பதில்லை. தங்கள் குல முத்திரைகளை இட்டார்கள். மதம் தொடர்பானவர்களும் இட்டார்கள். இதை நான் கூறுவதற்கு காரணம் ஆமை பொறித்த காசுகளை மொழிப்பெயர் தேயத்தில் இரண்டே மரபைச் சேர்ந்தவர்கள் தான் இட்டார்கள். ஒன்று பாண்டியர். இன்னொன்று உருகுணையில் உள்ள ஒரு குலத்தோர். பாண்டியர் தவிர்த்து உருகுணையில் மொத்தம் மூன்று காசுகள் ஆமை தொடர்பானவை. அவை மூன்றும் கீழே உள்ளன. இவற்றில் உள்ள ஒற்றுமையை வைத்துத்தான் நான் அடுத்த பதிவான இலங்கையில் சமணர் என்ற பதிவை இடப்போகிறேன்.


இதில் சூடஷமனஹ என்னும் பொறிக்கப்பட்ட எழுத்துகளுக்கு நடுவே ஒரு ஆமை உள்ளதை கவனியுங்கள். இவர்கள் அரசர்களாக இருக்க வாய்ப்பில்லை. வணிகர்களாகவோ சமணம் தொடர்பானவர்களோ அல்லது உருகுணைப் பாண்டியர்கள் தொடர்பானவர்களாகவோ இருக்கலாம்.


இதுவும் உருகுணையில் கிடைத்த காசுதான். ஆமையின் வடிவத்திலேயே உள்ள தெளிவற்ற  பிராமி எழுத்துகள் பொறித்த காசு.

இதுவும் உருகுணையில் கிடைத்த காசுதான். பின்னால் ஓன்பது ஆமைகள் சுற்றுகின்றன. முன்னால் கபதிகசமணசபுதசட‌கடக என்றுள்ளது. கபதி என்றால் பிராகிருதத்தில் குடும்பம் என்று பொருள். சேர்த்துப் படித்து பொருள் உணர்ந்தால் இதை சமனாச குடும்பத்தலைவனின் மகன் சடகன் கொடுத்தவை என பொருள் தரும்.

இதுவும் உருகுணையில் கிடைத்த காசுதான். பின்னால் ஆமை ஒன்று. முன்னால் தேவாளபூச என்று எழுதியிருப்பதாக கூறுகின்றனர். இதில் ஆறெழுத்து உள்ளது. ஆனால் ஐந்தை தான் படித்திருக்கின்றனர். ள.ழ,ற,ன என்ற நான்கு எழுத்துக்களும் தமிழ் பிராமிக்கே ஊரியது. அதனால் நான் அந்த ஆறாவது எழுத்தையும் சேர்த்து தேவாளபூதன் எனப்படிக்கின்றேன். காரணம் தமிழ் பெயர் பெரும்பாலும் அன் விகுதியில் முடியும்.

உருகுணைப் பாண்டியர்கள்

இந்த வலைபூவை வாசிக்கும் அனைவருக்கும் என் வணக்கங்களும் நன்றிகளும்.

இன்று குற்றாலத்தில் நடந்த சி.பா. ஆதித்தனார் இதழியல் கழகம் நடத்திய விழாவில் என் ஆய்வுக்கட்டுரை ஒன்று வெளியானது. ஆய்வின் தலைப்பு இதுதான்.

"உருகுணை பாண்டியர்கள்"

இந்த கட்டுரையை கீழே தந்திருக்கிறேன். ஆனால் இக்கட்டுரையை படிக்கும் முன்பு முக்கியம் சில செய்திகளை படிப்பவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். இந்த இதழில் வெளியைடப்படும் கட்டுரைகள் அனைத்தும் 5 ஏ4 பக்கங்களுக்கு மிகாமல் சில அளவு எழுத்துரு விதிகளைத்தான் கொண்டிருக்க வேண்டும் என்று கூறியிருந்த படியால் என்னால் முழுவிவரங்களையும் தொகுக்க இயல்வில்லை. முழு விவரங்களும் இதே வலைபூவில் அடுத்த பதிவில் போடுகிறேன்.

ஆனால் நான் இந்த கட்டுரை மூலம் விவாதிக்க விரும்பும் 5 விடயங்கள் மிக முக்கியமானவை. அதை எதிர்பார்த்து தான் இக்கட்டுரையை பொதுவெளியில் பகிர்கிறேன்.

இனி கட்டுரைக்கு போகலாம்.

உருகுணை பாண்டியர்கள்

அறிமுகம்:

உருகுணையை தேவநாம்பிய திச்சனின் (கி.மு.307 - கி.மு.267) தம்பியான மகாநாகனுக்கு முன்னர் ஆண்ட மன்னர்களை பற்றி இலங்கையின் வரலாற்று நூல்களான மகாவம்சமும் தீபவம்சமும் சான்றுகளை தரவில்லை. ஆனால் பிற்காலத்தில் எழுதப்பட்ட தாதுவம்சம்1 என்னும் நூல் இவர்களைப் பற்றிய தகவல்களைத் தருகிறது. மகாவம்சம் இவர்களை பற்றி நேரடியான தகவல்களை தராவிட்டாலும் தேவநாம்பியன் எடுத்த விழாவுக்கு உருகுணையின் தலைநகரான கதிர்காமத்தின் மன்னர்கள் வந்தார்கள் என்ற குறிப்பை மட்டும் தருகிறது.2 இந்த உருகுணை மன்னர்கள் வெளியிட்ட 16 கல்வெட்டுகளும்3 ஒரு காசும்4 பௌத்த இலக்கியங்களும் இவர்களின் வரலாற்றை அறிவதற்கு உதவியாய் உள்ளன.

உருகுணை மன்னர்கள் பாண்டியர்களே:


உருகுணையை மகாநாகன் காலத்துக்கு முன் ஆண்ட மன்னர்கள் பாண்டியர்களே என்பதற்கு அவர்கள் வெளியிட்ட கல்வெட்டுகளில் உள்ள குலக் குறீயீடான மீன் பொறிப்பும், அவர்கள் வெளியிட்ட காசுக்கும் தமிழக பாண்டியர்களின் காசுகளுக்கும் உள்ள ஒற்றுமையும், கல்வெட்டுகளிலும் காசிலும் அவர்களின் பெயரான மஜிமஹராஜா என்று வரும் மீனை நினைவுப்படுத்தும் பெயரும், அவற்றில் காணப்படும் குலக்குறியீடான மீன் சின்னமுமே சான்றுகளாம். இவர்களைப் பற்றி வெளியிட்ட வரலாற்று நூலாசிரியர்கள் இவர்கள் தமிழகத்தவர்5 என்றும் பாண்டியர்கள்6 என்றும் கூறியுள்ளனர்.

அடைக்கலம் புகுந்த சிங்களவர் வரலாறு:

வட இலங்கையை ஆண்ட தேவநாம்பிய திச்ச‌னுக்கு பல தம்பிகள் இருந்தார்கள். தேவநாம்பியனின் மனைவி தன் மகனை அடுத்த அரசனாக்க வேண்டும் என்பதற்காக மகாநாகனை கொல்ல முயன்றாள். இதை அறிந்த மகாநாகன் உருகுணை அரசர்களிடம் அடைக்கலம் ஆனான். அவனுக்கு அட்டாலயதிச்சன், கோதாபயன் என இரு மகன்கள் இருந்தனர். கோதாபயன் தன் மகனான காகவண்ண தீச்சனை உருகுணைக்கு அரசனாக்க ஆசைப்பட்டு உருகுணையின் மன்னர்கள் குலத்தை அழித்தான். அந்த பாவத்தை போக்குவதற்கு பௌத்த விகாரைகளை கட்டினான் என்கிறது தாதுவம்சம் என்னும் நூல்.2

கல்வெட்டுகள் காட்டும் பாண்டியர் வரலாறு3:

தென்னிலங்கையின் கெனனக்கலையில் உள்ள பிராகிருதக் கல்வெட்டில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டதுடன் காமனி திச்சனின் தந்தையான மச்சமகாராஜன் கிரிதிட்டைகரசகினிதிட்டைவெளிகாமைகாசியப்பநகரம்மலுகாமம் மற்றும் நொக்கபிகம் போன்ற ஊர்களை சங்கத்துக்கு தானமளித்தான் எனக் கூறுகிறது.
பெவெட்டக்கலையில் உள்ள கல்வெட்டு ஒன்று மீன் சின்னப் பொறிப்புடன் காணப்படுகிறது. அதில் காமனியின் பத்து மகன்களில் மூத்தவன் தம்மராசனின் மகன் மகாதிச்சன் செய்து கொடுத்த குகை இது என்றுள்ளது. பெவட்டக்கலையின் இன்னொரு கல்வெட்டில் காமனியின் மகன் உதிராசன்அவனின் மகன் அபயன்அவனின் மகள் அனுராதி கொடுத்த குகை என்று உள்ளது.
மேலும் கொட்டடைமுகலையில் உள்ள ஏழு கல்வெட்டுகள் மீன் சின்ன பொறிப்புடன் பின்வரும் மன்னர்களை பற்றிக் குறிக்கிறது. "தம்மராசனின் மகனான மகாதிச்சனின் மகளும்அபயனின் மகனான திச்சனின் மனைவியும் ஆன‌ சவெரை என்ற இளவரசி கொடுத்த குகை" என்றுள்ளது.



இந்த கல்வெட்டுகளின் உதவியோடும் பௌத்த இலக்கியங்களின் துணையோடும் பின்வரும் காலக்கணிப்புகள் தரப்படுகிறது.

காலக்கணிப்பு:

அநுராதபுரத்தை தேவநாம்பியன் ஆட்சி முடிவிலிருந்து எல்லாளன் பிடிக்கும் வரையிலும்அதே போல் காவண்திச்சன் உருகுணையில் ஆட்சி தொடங்கிய போதும் 62 ஆண்டுகள் ஆகியிருந்தன. காவண்திச்சனின் தந்தை கோதாபயன் 10 உருகுணை அரசர்களை கொன்று ஆட்சியைப்பிடித்தான் எனக் கூறப்படுவதால் அவனும் காவண்திச்சனுக்கு சில ஆண்டுகள் முன் வரை ஆட்சி நடத்தியிருப்பான்(கி.மு. 230 - 205). தேவநாம்பியன் தம்பியான மகாநாகன் உருகுணைக்கு தப்பி வந்த பிறகே அவன் அசோகனிடமிருந்து போதி மரத்தை வாங்கி விழா எடுத்தான். அக்காலம் தேவநாம்பியன் கடைசி காலமாகும். இவ்விழாவிற்கு உருகுணைத் தலைநகரான மாகாமத்தை சேர்ந்தவர்கள் வந்திருந்தார்கள் என‌ பன்மையிலேயே கூறப்படுவதால் இவர்கள் தான் இந்த பத்து உருகுணை அரசர்கள் எனலாம். உருகுணையின் பத்து சகோதரர்களும் கோதாபயனுக்கு முன் சில ஆண்டுகள் ஆண்டிருப்பார்கள்.(கி.மு.270 – 230).
இவர்களின் தந்தையான காமனி அபயன் சில ஆண்டுகளும் பாட்டனான மஜிமகாராசன் சில ஆண்டுகளும் உருகுணையை ஆண்டிருந்தார்கள் எனக்கூறலாம். "மஜிமஹ" என்னும் பெயர் பொறித்த காசும் காமணி அபயனின் தந்தை கிராமங்களைத் தானமாக கொடுத்ததையும் வைத்து இவர்கள் உருகுணையை முழுதுமாகவும், அநுராதபுர இராச்சியத்தை சாராமலும் ஆண்டார்கள் எனக் கொள்ளலாம்.(கி.மு.320–270) மேலுள்ள காலக்கணிப்பில் இருந்து இவர்களின் ஆட்சியாண்டுகள் பின்வருமாறு பட்டியல் இடப்பட்டுள்ளது.
1.
1.  1.  மஜிமஹாராஜன் (கி.மு. 320 – 295)
2.2.   காமணி அபயன் (கி.மு. 295 - 270)
3.3. தசபாதிகர் எனப்படும் பத்து சகோதரர்கள் (கி.மு. 270 – 230) கோதாபயனால் கொல்லப்பட்டதும் இவர்களே.
4.4. இந்த பத்து சகோதரர்களில் முதல் இருவரின் தலைமுறைகளும் கல்வெட்டுகளில் கொடுக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் நாடாண்டதாக கொள்ள இடமில்லை.

இலங்கையில் சமணம்:

      மஜிமஹா ராஜன் கொடுத்த தானம் சங்கத்துக்கு கொடுக்கப்பட்டது எனக் கல்வெட்டு கூறுவதால் அந்த சங்கம் எது என ஆராய்தல் வேண்டும். தேவநாம்பிய திச்சனுக்கு முன்னரே மஜிமஹராஜன் ஆண்டதாக கூறுவதால் அக்காலத்தில் இலங்கையில் பௌத்த சங்கம் இருக்க வாய்ப்பில்லை. அதனால் இது சமண சங்கமே எனக் கூறலாம். இதற்கு வழு சேர்க்கும் விதமாக இலங்கையில் "சூடஷமணஹ" என்னும் பிராகிருதப் பிராமி எழுத்துக்களுடன் ஆமை வடிவம் பொறித்த காசே சான்றாகும்.4
       மேலும் மஜிமஹராகன் காசில் தன் பெயரைப் பொறித்த‌தும் அல்லாமல் பின்பக்கத்தில் களிறையும் பொறித்துள்ளான். தமிழகத்திலும் இலங்கையிலும் கிடைத்த பாண்டியர் காசுகளில் களிறுகயல்ஆமையானை போன்றவை முக்கியப் பங்கு வகிப்பவை.7 தமிழகத்தில் உள்ள மாங்குளக் கல்வெட்டு நடனகாசிநாதனின் அகரமேறிய மெய் முறைமைப்8 படி கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு என நிறுவப்பட்டுள்ளது. இதில் பாண்டியன் நெடுஞ்செழியன் சமணர்களுக்குக் கொடுத்த தானம் பற்றி உள்ளது. அதனால் சமணம் கி.மு. நாலாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழகத்தில் பரவி நாலாம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கையில் பரவியதாகக் கொள்ள முடியும். தேவநாம்பியன் காலத்திற்குப் பிறகு தென் இலங்கையில் பரவிய பௌத்தம் சமண மத ஆதிக்கத்தை குறைத்திருக்கலாம்.

மீளாய்வுக்கும் புதிய ஆய்வுக்கும் உட்படுத்த வேண்டியவை:

1.  1.  மஜிமஹாராஜனின் முன்னோர்தெற்கு தென்கிழக்கு இலங்கைப் பகுதிகளில் அரசமைத்த விதமும் காலமும்.
2.   2. இலங்கையில் சமணப்பரவலும்தென்னிலங்கை தமிழகத்தோடு வைத்திருந்த தொடர்பும்.
3.3.மஜிமஹராஜன் அசோகனுக்கு முன்னரே காசுகளையும்4 பிராகிருதக் கல்வெட்டுகளையும் உருவாக்கியதால் அசோகனால் பிராகிருதப் பிராமி உருவாக்கப்பட்டது எனக் கூறப்படுகின்றமை.
4.  4. தமிழகத்தில் தமிழி எழுத்துக்களின் வளர்ச்சியை அகரமேறிய மெய் முறைமை கொண்டு கணிப்பது போல் மச்சமாராசனின் ஐந்து தலைமுறை அரசர்கள் வெளியிட்ட கல்வெட்டுகளை ஆய்ந்து தென்னிலங்கையின் பிராமி எழுத்துக்களுக்கும் முறைமைகளை உருவாக்க வேண்டும்.

 மேற்கோள்கள்:

1. 1. ஸ்ரீசாகுசந்தர்தாதுவம்சம்பக்கம் 23-24
2. 2. மகாவம்சம் – 18, 19:54, போதி மரம் நிறுவுதல்.
3.3. Inscriptions Of Ceylon – Part I, Plate Numbers 406 (Henenagala), Plate No’s 549, 550, 551 (Bevettagala Inscriptions), Plate No’s 564, 565, 568, 569 (Kottatamuhela Inscriptions)
4. 4. ஈழத்தமிழரின் பண்டைய கால நாணயங்கள்புட்பரத்னம்-2001, பக்கம்– 49, 53

5.5The titles of Sinhalese Kings as recorded in the inscriptions of 3rd century B. C. 3rd century A. C., Nicholas, C. W., 1949, University of Ceylon Review Vol.VII, No.4,1949 , pp 235-248
6.6மயிலை சீனி. வேங்கடசாமி (2007). சங்ககாலத் தமிழக வரலாறு – 2, பக்கம் 211 – 218, சென்னை: மீனா கோபால் பதிப்பகம்.
7.7ப. சண்முகம் (2003) சங்கக்காலக் காசு இயல், சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். (பக்கம் 32-46)
  8.  தமிழ் விக்கிப்பீடியாஅகரமேறியமெய்முறைமைநடனகாசிநாதன்,மகாதேவன்மயிலை சீனி. வேங்கடசாமி போன்ற ஆய்வாளர்கள் கூறிய அகரமேறிய மெய் முறைமை குறிப்புகளை

தொகுத்து எழுதப்பட்ட கட்டுரை. (இணைப்பு: http://ta.wikipedia.org/wiki/அகரமேறிய_மெய்_முறைமை)

இந்த ஆய்வுக்கட்டுரை முடிந்தது இனி மீளாய்வுக்கும் புதிய ஆய்வுக்கும் உட்படுத்த வேண்டியவை என்ற தலைப்பின் கீழ் உள்ள ஒவ்வொரு பகுதியையும் தனிக் கட்டுரையாக ஆராயலாம். அசோகனுக்கு முன்னரே பிராகிருதப் பிராமியை பாண்டியர் எனக் கருதப்படும் அரசர்கள் உருவாக்கி விட்டார்கள் என மறுக்க முடியாத சான்று இதில் உள்ளதால் மதம் பிடித்த "வெள்ளை யானை" ஆய்வுத் தரப்பினற்கு இது மிகப்பெரிய அடி.


Friday 9 August 2013

கூர்ங்கோட்டவர் என்றால் என்ன?

கூர்ங்கோட்டவர் என்பது நான் நீண்ட நாட்களாக எழுத நினைத்திருக்கும் 18 கதைகளின் தொடர் புதினத் தலைப்பு. இதில் கூர்ங்கோட்ட என்பது கூர்மையான தந்தங்களை உடைய யானை என்னும் பொருள்படும். அர் என்னும் விகுதி கூரிய தந்தங்களை உடைய யானையைக் கொண்டவர்கள் அல்லது யானைப்படையை கொண்டவர்கள் என்று பொருள் தரும். உலகின் முதற்குடியாம் தமிழ் குடி அதில் மிகவும் பண்டைய குடியாம் பாண்டியரிடத்தே மிகப்பெரியளவில் கரிப்படை இருந்தது. இந்த தொடர் புதினத்தின் 18 பாகங்களுமே 18 பாண்டிய மன்னர்களை கூற விளைபவை. அதனால் வள்ளுவர் காட்டிய சொல்லையும் (கூர்ங்கோட்ட ) என் கற்பனையின் விகுதியையும் சேர்த்து இந்த பெயரை உருவாக்கினேன். அவை பற்றிய விவரம் கீழே.

 1- 6. முதல் ஆறு பாகங்கள். இவை தொன்மங்களிலும் புராணக்கதைகளிலும் கூறப்படும் மிகைப்படுத்தப்பட்ட வரலாறுகளை உடைய பாண்டியர்கள் பற்றியது. இவற்றில் காணப்படும் அனைத்தும் வராலாற்று ஆதாரங்களுக்கு புறம்பானவை. ஆனால் கதை என்று வருமிடத்தில் இதில் பல கற்பனைகளை சேர்த்து பார்த்து நாம்  மகிழலாம். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் "Mummy"  ''Lord of The Rings'' போன்ற கதைத் தண்மை கொண்டவை.

7 - 9 ஏழில் இருந்து ஒன்பதாவது பாகம் வரை இவை சங்க காலப் பாண்டியர்கள் பற்றியது. இவற்றில் வரும் ஒவ்வொரு தனித்தனி வாக்கியமும் வரலாற்று உண்மை. ஆனால் அடுத்துவரும் வாக்கியத்தை இணைத்துப் பார்த்தால் அவை என்னுடைய ஊகமாய் இருக்கும். உதாரணம் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்பவன் இருந்தது உண்மை. உக்கிரப் பெருவழுதி என்னும் அரசன் இருந்ததும் உண்மை. ஆனால் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனுக்கு பிறகு உக்கிரப் பெருவழுதி ஆண்டான் என்றால் அது என ஊகம்.

10 - 18 அடுத்த மூன்று மூன்று மூன்று கதைகளும் முறையே முதலாம் பாண்டியப் பேரரசை சேர்ந்த 3 பாண்டியர்களையும், இரண்டாம் பாண்டியப் பேரரசை சேர்ந்த 3 பாண்டியர்களையும், தென்காசி பாண்டியர்கள் மூவரையும் பற்றியவை. இவற்றில் கூறப்படும் பெரும்பாலான சம்பவங்கள் உண்மையானவையே.

இந்த 18 பாகங்களில் ஏழில் இருந்து 15ஆவது பாகம் வரை மூலக்கதையை நான் ஏற்கனவே தயார் செய்து வைத்தவை. மற்றவை எல்லாம் ஒரு வரிக்கதைகளாகவே தற்போது வரை இருக்கிறது. 7, 10-15 ஆகிய ஏழு கதைகளுமே ஈழத்தை பாண்டியர்கள் ஆண்டதைக் கொண்டு மையமாக வைத்து சித்தரிக்கப்பட்டவை.

கதை உருவாக்கத்தின் பின்னணி

நான் அடிப்படையில் இந்தியர் பற்றிய பண்டைய வரலாற்றையும் போர் முறைகளையும் திரைப்படங்களாக்கி இந்தியர் புகழை உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் பரப்ப வேண்டும் என்று என் சிறுவயதில் நினைத்தவன். அதற்கு வட இந்தியர் வரலாற்றை மட்டுமே வரலாற்று பாடங்களாய் அமைத்த தமிழ்நாடு அரசே காரணம். வீட்டில் திரைப்பட தொழில்நுட்பம் குறித்த பட்டயத்தை பத்தாவது முடித்தவுடன் படிக்க வேண்டும் என்று கூறியதும் கடும் எதிர்ப்பை சந்திக்க நேர்ந்தது. அதனால் வழியில்லாமல் இயந்திரவியல் பட்டயம் படித்தேன். அதற்கும் கூட என் நண்பர் ஒருவர் இயந்திரவியல் பட்டயத்தில் நீ படிக்கும் மென்பொருள்கள் சில மாயா போன்ற திரைப்பட வரைகலை மென்பொருட்களின் அடிப்படையை கொண்டிருக்கும் எனக் கூறியதே. அதனால் நான் இயந்திரவியலை பட்டயமாக கோயம்புத்தூர் தொழில்நுட்ப கழக தொழிலிடை பல்தொழில்நுட்ப கல்லூரியில் படித்தேன். DME Sandwich in CIT sandwich polytechnic college

அப்படிப்பை நிறைவு செய்யும் வேளையில் எனக்கு "பொள்ளாச்சி பாலு" என்ற திரைப்படத் துறை மக்கள் தொடர்பாளரிடம் என் நண்பர்கள் பழக்கம் ஏற்படுத்தித் தந்தனர். அவரின் வேலை யாதெனில் ஒரு திரைப்படக் காட்சிக்கு அதிக மக்கள் கூட்டத்தை காட்ட வேண்டும் என்றால் அவரின் மூலம் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மக்களில் ஒரு கூட்டததை திரட்டிக் கொள்வர். ஆணாய் இருந்தால் ஒரு நாளுக்கு 100 ரூபாயும் பெண் என்றால் 150 ரூபாயும் அத்தொடர்பாளர் மூலம் காட்சியில் நின்றால் எங்களுக்கு கிடைக்கும். இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி "காதலில் விழுந்தேன்", "கணபதி சில்க்ஸ்", "மலயாளப் படமான எஸ். எம். எஸ்.", "பாராசூட் விளம்பரம்" போன்ற விளம்பரங்களிலும் திரைப்படங்களிலும் நடக்கும் படப்பிடிப்பு காட்சிகளுக்கு நேராகச் சென்று படம் எடுக்கும் முறை எப்படி என்றெல்லாம் பார்த்துக் கொண்டேன். அந்த மக்கள் தொடர்பாளரிடம் கேட்ட போது தான் எனக்கு போர் திரைப்படங்களை எல்லாம் எடுக்க 2020களில் 300 கோடி ரூபாய் செலவாகும் எனத் தெரிய வந்தது. நான் பட்டயம்  முடித்த பிறகும் கூட இந்திய வரலாறுகளை படிப்பதிலேயே என் ஓய்வு நேரத்தைச் செலுத்தினேன்.

பிற்பாடு இளநிலை இயந்திரப் பொறியியல் படிக்க காஞ்சிபுரத்தின் சங்கரா பல்கக்கலைக்கழகத்தில் (SCSVMV UNIVERSITY) சேர நேர்ந்தது. மகாபாரதம், இராமாயணம் போன்றவற்றின் காலக்கணிப்புகளை எல்லாம் அறிந்து கொள்ள தொன்மவியல் ஆய்வாளர் மகாலிங்கம் எழுதிய பண்டைய பாரதம் (Ancient India) படித்த போதுதான் குமரிக்கண்டம் பற்றித் தெரிய வந்தது. பாண்டியர் வரலாற்றின் மீது ஆர்வமும் எழுந்தது. அதனால் பாண்டியர் பற்றிய தொன்மக் குறிப்புகளில் இருந்து வரலாற்றுக் குறிப்புகள் வரையும் அனைத்தையும் படிக்கத் தொடங்கினேன். அதுவரையிலும் என் சொந்த ஊராம் தென்காசியின் பெரிய கோயிலை கட்டியது பாண்டியன் என்று மட்டுமே தெரியுமே தவிர அவர்களுக்கு என்று அங்கு ஒரு சிற்றரசு மூன்று நூற்றாண்டுகள் இருந்தது என அறவே தெரியாது. அதை படித்ததில் இருந்தே எனக்கு மனதில் ஒரு நெருடல். மகாபாரதம், இராமாயணம் என வட இந்திய புராணக் கதைகளும் இதிகாசங்களும் தமிழர்களின் தலைவன் என்று சொல்லிக் கொள்(ல்)வோர் ஆதிக்கம் செலுத்தும் ஊடகங்களில் எல்லாம் காட்ட படுகிறது. அதுவும் பல தயாரிப்பு நிறுவனங்கள் நடத்தும் ஒவ்வொரு இதிகாச புராணங்களையும் தமிழ் தொலைக்காட்சிகளிலும் தொடர்ந்து காட்சிப்படுத்தினர்.

ஏன் என் பெற்றோரோ தமிழ் ஊடகங்களோ தொன்மத்தில் கூறப்படும் தமிழர் பற்றியும் சங்க இலக்கிய மன்னர்கள் பற்றியும் பிற்கால அரசர்கள் பற்றியும் தென்காசியை 3 நூற்றாண்டுகள் தலைநகரமாக கொண்டு ஆண்ட தென்காசிப் பாண்டியர்கள் பற்றியும் காட்சிப் படுத்தவோ சொல்லிக் கொடுக்கவோ இல்லை. இந்த அலட்சிய மனப்பான்மை ஏன் எனத் தெரிந்து கொள்ள மேலும் வரலாற்று நூல்களை படித்த போதுதான் தமிழர்களின் வரலாறு மட்டும் தொடர்ந்து மறைக்கப்படுவதுடன் அதைப் போற்ற வேண்டிய தமிழர்களே அதை நம்பாமலும் தாழ்வு மணப்பாங்கில் துவண்டு கிடக்கின்றனர் என்பதையும் தெளிவாகப் புரிந்து கொண்டேன்.

அதற்கும் மேலாக இந்திய அரசே துணை நின்று நடத்திய ஈழத்தமிழர் படுகொலை, நீர் பங்கீட்டில் காட்டிய அலட்சியப் போக்கு, தமிழக மீனவர்கள் தொடர் படுகொலை, தமிழ் வரலாற்று ஆய்வாளர்களும் தொல்லியலாளர்களும் கேளிக்கு உட்படுத்தப்பட்டமை இவை அனைத்தும் சேர்ந்து இந்திய வரலாற்றில் குவிந்து கிடந்த என் ஆர்வத்தை ஈழத்தமிழர் வரலாற்றிலும் தமிழர் வரலாற்றிலும் திருப்பின. அதில் இருந்து ஈழம், தமிழகம், தமிழ் மன்னர்கள் போன்றவை தொடர்பாக வந்த புதினங்கள், வரலாற்று தொல்லியல் இலக்கிய நூல்கள் அனைத்தையும் படிக்கத் தொடங்கினேன்.

தமிழர் வரலாற்றை மூலை முடுக்குகளிலும் கொண்டு செல்ல திரைப்படம் என்ற ஊடகத்தால் மட்டுமே முடியும். ஆனால் படித்தவர்களும் விவரம் தெரிந்தவர்களும் கூட தமிழர் வராலாற்றைக் கூறினால் அதை நம்பாமலும் கேளி பேசியும் வந்தனர். இவர்களைத் தடுப்பதற்கு இரண்டே வழிகள் தான். ஒன்று தமிழர் வரலாற்றை பின்னுக்குத் தள்ளும் முந்து அசோகப்பிராமி கொள்கை, கயவாகு காலம்காட்டி முறைமை, தமிழக தாழிகளின் காலத்தை வரலாற்றாளர்களும் தொல்லியலாளர்களும் கணிப்பதற்கு கையாண்ட முறைகள் அனைத்திலும் உள்ள புகுத்தப்பட்ட இடைவெளிகளையும் கோளாறுகளையும் தகர்க்க வரலாற்று நூல்கள் எழுதுதலும், அதை அனைவரும் அறிந்து கொள்ளும் படியான திரைப்படங்கள் இயக்குவதுமே.

தற்போதைய பொருளாதார சூழல்களில் போர் திரைப்படம் என்பது மிகச் சிரமமான காரியம். அதனால் திரைப்படம் எடுக்கும் அளவிற்கு ஒரு புதினம் எழுதிவிட்டால் அதை பின்வருபவர் எவராவது திரையில் கொண்டுவருவார் என்ற நம்பிக்கையில் இந்த புதினங்களை எழுதத் தொடங்கியது. வரலாற்று ஆய்வும் இன்னொரு தளத்தில் சென்று கொண்டே தான் இருக்கிறது.

பொன்னியின் செல்வன் பீலியா

தமிழர் வரலாற்று புதினங்கள் என்றாலே சோழப் பேரரசர்களின் ஆதிக்கம் தான். பாண்டியர் சிங்களவரிடம் தன் மணிமுடியைக் கொடுத்ததால் அதை ஒரு சாக்காக வைத்தே பாண்டியர்களை தாழ்த்தி விட்டனர். அந்த மணிமுடியைக் கொடுத்த காரணமோ அரசியல் சூழ்நிலைகளோ வேறு எவர் சந்தித்து இருந்தாலும் அதையே செய்திருப்பார்கள். அது தவிர்த்து முதலாம் பாண்டியப் பேரரசை ஏற்படுத்தியவர்கள் மூவர் சிங்களத்தையும் தன் கட்டுக்குள் வைத்திருந்தனர். மேலும் சிங்களம் கடல் கடந்து இருக்கும் நாடு. அதுவும் மணிமுடி ஒளித்து வைத்த இடமோ உருகுணை என்ற அடர்ந்த காடுகளைக் கொண்ட குறிஞ்சி முல்லை நிலம். அதனால் பாதுகாப்பு கருதியே இத்தகைய ஒரு செயலை பாண்டியன் செய்ய நேர்ந்தது. பாண்டியர்கள் சிங்களத்தை அடக்கி ஆண்ட வரலாற்றையும் புதினங்கள் தந்திருந்தால் இந்த பழிச்சொல்லுக்கு அவர்கள் ஆளாகி இருக்க மாட்டார்கள். வரலாற்று ஆய்வாளர்களுக்கு தெரியும் ஏன் பாண்டியன் தன் மணி முடியை அங்கு ஒளித்தான் என்று. ஆனால் அதை படிக்கும் வரலாறு மேல் அக்கறை இல்லாத சாதாரண மனிதர்கள் உணர்ச்சி வசப்பட்டு பாண்டியரை தவறாகவே எண்ணுவர்.

விதிவிலக்காக வந்த பாண்டியன் பவணி, கயல்விழி, இராஜமுத்திரை போன்ற பாண்டியர்களை மையப்படுத்திய புதினங்களும் மற்ற தமிழ் அரசர்களுடன் பாண்டியன் போரிட்டதையே சித்தரித்தன. கயல்விழி "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்" என்ற படமான போதும் கூட பாண்டியர்க்கு கிடைக்க வேண்டிய புகழ் அனைத்தையும் இராமச்சந்திரன் பெற்றுக்கொண்டார். இந்த பதினெட்டு புதினங்களும் பாண்டியர் பற்றிய அனைத்து பெருமைகளையும் கொண்டிருப்பதுடன் பாண்டியரால் தமிழும் தமிழரும் பீடு நடை போட்டதை நிச்சயம் எடுத்துக் காட்டும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

இளைய ராயினும் பகையரசு கடியுஞ்
செருமாண் தென்னர் குலத்துக்கு 

தமிழ் வரலாற்று புதினங்கள் வாயிலாகவே ஒரு இழுக்கு நேருமாயின் அதை பார்த்துக்கொண்டு தென்பாண்டி நாட்டில் பிறந்த நான் புதினம் எழுதும் நோக்கத்தையும் வைத்துக் கொண்டு சும்மா இருந்தால் தகுமா? அதனால் பாண்டியர் புகழ் பாடும் 9 புதினங்களுக்கான முன்னோட்டத்தை (Trailor) முகநூலில் விடப்போகிறேன். ஆர்வம் உள்ளவர் முகநூல் பக்கத்தில் உங்கள் கருத்துக்களை முன்வைக்கவும்.

https://www.facebook.com/Koorngotavar

Wednesday 31 July 2013

கடற்பட்டும் பெரிப்ளசின் ஆர்கெய்ருவும்


எனக்கு நீண்ட நாளாக இருந்த ஐயம் எரித்திரயக் கடல் பெரிப்ளசில் குறிப்பிடப்படும் ஆர்கெய்ரு பாண்டியனின் அழகன்குளமா? அல்லது சோழனின் உறையூரா? என்று. அது தொடர்பாக கடலியல் ஆய்வில் ஈடுப்பட்டுள்ளவர்களிடம் நடந்த உரையாடல்கள் சில.

//நமது பாக் வளைக்குடா முழுவதும் கடல் பட்டு சிப்பிகளில் இருந்து எடுக்கப்பட்டது - Orissa Balu//

மேற்கத்தியர் எழுதிய குறிப்புகளில் காணப்படும் ஆர்கெய்ரு பாண்டிய நாட்டு அழகன்குளம் என்பது இக்கருத்து மூலம் உறுதி ஆகிறது. சிப்பி முதுது இவை எல்லாம் பாண்டிய நாட்டில் தான் அதிகம் கிடைக்கும். ஆர்கெய்ருவில் பட்டுத்துணியில் முத்தைத் தைத்ததாக குறிப்புண்டு.

//pearl-fisheries are; (they are worked by condemned criminals); and it belongs to the Pandian Kingdom. Beyond Colchi there follows another district called the Coast Country, which lies on a bay, and has a region inland called Argaru. At this place, and nowhere else, are bought the pearls gathered on the coast thereabouts; and from there are exported muslins, those called Argaritic. - Periplus of the Erythrean Sea - Para 59//

மசுலின் பிற்காலத்தில் வழக்கில் வந்த துணியாகத் தான் தெரிகிறது. எரித்திரியக் கடல் குறிப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த போது அவர்களுக்கு கடற்பட்டின் ஆங்கில பெயர் தெரியாதலால் மசுலின் என குறிப்பிட்டு இருப்பார்களோ என நான் ஐயுருகிறேன்.

எரித்திரியக் கடல் குறிப்புகள் குறிப்பிடும் ஆர்கெய்ரு சோழரின் உறையூரா அல்லது பாண்டியரின்  அழகன்குளமா என்பது தொடர்பாக எனக்கும் கடலோடி நரசையா அவர்களுக்கும் நடந்த உரையாடல் கீழே.

((அழகன்குளத்தை அர்கெய்ரு என்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். இதைப் பாருங்கள்:

59. From Comari toward the south this region extends to Colchi, where the pearl-fisheries are; (they are worked by condemned criminals); and it belongs to the Pandian Kingdom. Beyond Colchi there follows another district called the Coast Country, which lies on a bay, and has a region inland called Argaru. At this place, and nowhere else, are bought the pearls gathered on the coast thereabouts; and from there are exported muslins, those called Argaritic.
இது செங்கடல் வழிகாட்டியின் 59 வது பத்தி. இங்கு ஆர்கரு உள் நாட்டில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பரிசீலிக்கவும்.

நான் திருசிரபுரம் என்ற நூல் எழுதிக்கொண்டிருக்கின்றேன் அதில் இப்பத்தியை இவ்வாறு மொழிபெயர்த்துள்ளேன்:

செங்கடல் வழிகாட்டி உறையூரைச் சுட்டிக்காட்டுகிறது: ஆற்றின் வழியில் அமைந்துள்ளதாகக் கூறுகிறது. செங்கடல் வழிகாட்டியின் 59 வது பாராவில் உறையூர் குறிப்பிடப்பட்டுள்ளது. “. . கொல்சிக்கு அப்பால் கடற்கரை நாடு (சோழநாடு) இருக்கிறது. அந்த மாவட்டம் ஒரு விரிகுடாவின் ஓரத்தில் உள்ளது. உள்நாட்டில் அர்கரு(உறையூர்) என்னும் இடம் ஒன்று இருக்கிறது. கடலில் எடுக்கப்பட்ட முத்துகளெல்லாம் அவ்வூரில்தான் விற்பனை செய்யப்படுகின்றன. முத்தைத் தவிர அங்கிருந்து மஸ்லின் துணியும் ஏற்றுமதியாகிறது. அந்த்த்துணிக்கு அர்கரிட்டிக் என்பது பெயர்.

கோழியூர், உறந்தை என்றெல்லாம் அழைக்கப்பட்ட ஊர் இது. கற்றவர்கள் இதைப் பற்றிய விவரம் தெரிந்திருந்தால் எழுதவும் - Narasiah.))
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

((இந்த ஐயம எனக்கும் வந்தது. விக்கிப்பிடியாவிலுள்ள செங்கடல் படthதிலும் நீங்கள் கூறியது போல் உறையூர் என்று தான் உள்ளது. ஆனால் 

\\A famous ancient port town at Alagankulam is situated about 3 kms from the shoreline on the
bank of river Vaigai. Presently, a channel which is about two km from ancient site is joining with
sea which could have been near to the site in bygone age must have been used for plying the boats.
No literary references have been noticed about this town either in Sangam literature or in foreign
notices (Kasinathan, 1992). There is a word Argeirou (McCrindle, 1885) mentioned in Geography
of Ptolemy, which could be identify with this place. It is said that this town is located  around
Orgalic Gulf, which is suggested to be of Rameswaram area (McCrindle, 1885). The word Argalou
of Periplus of Erythrean Sea (McCrindle, 1887) also suggest the very location of Alagankulam. It is
said that it is lying inland and celebrated for a manufacture of muslin adorned with small pearls.\\ என்று 

Riches of Indian Archaeological and Cultural Studies - Onshore and Near Shore Explorations along the Southern
Tamilnadu Coast: with a View to Locating Ancient Ports and Submerged Sites - DR. A.S. GAUR AND DR. SUNDARESH உள்ளது. 

நீங்கள் கூறிய 

//கொல்சிக்கு அப்பால் கடற்கரை நாடு (சோழநாடு) இருக்கிறது. அந்த மாவட்டம் ஒரு விரிகுடாவின் ஓரத்தில் உள்ளது.//

இதே தகவல்கள் வைகை ஆறு, "தென் பாண்டி நாடு அடுத்த பாண்டிநாடு" என்பதற்கும் பொருந்தும். (கொற்கை அடுத்து மதுரை) வைகை கடலில் கடக்கும் இடமும் வரிகுடா (Orgalic Gulf,) போன்று தான் இருக்கும். தென் பாண்டி நாடு என்பது பாண்டி நாட்டின் அகநாடு. மேலும் பாண்டி நாடு தான் முத்து வணிக புகழ்பெற்றது. சோழ நாடல்ல. மேலும் ஒரு உதாரணமாக கடலோர வணிகத் துறைமுகங்கங்களுக்குத் துணையாக உள்ளூர் வணிக நகரங்களும் அமைந்திருந்தன. அழகன்குளமும் அப்படியே.

விக்கிப்பிடியாவில் நீங்கள் கூறிய தகவலும் பழைய நூல்களிலும் எடுத்தாலப்பட்டவை. அனால் நான் மேற்குறிய மேற்கோள் (Kasinathan,  1997) என்ற ஒரு நூலை எடுத்தால்வதால் அது ௨௦௦௦ த்துக்கும் மேல் எழுதப்பட்டவை என்பது உறுதி. 

Reference Books
Kasinathan, N.  1992. Alagankulam-A Preliminary Report. Madras: State Department of Archaeology.
Kasinathan, N.  1997.  Antiquity of Sea  Voyage in  Tamilnadu. Paper  presented in  First International
Conference on Marine Archaeology of Indian Ocean Countries, held at Chennai on 21-22 February,
McCrindle,  J.W. 1885. Ancient India as Described by Ptolemy. Reprinted in 1985, New Delhi: Todays & 
Tomorrow's Printers and Publishers.
McCrindle,  J.W. 1879. The Commerce & Navigation at the Periplus of Erythrean Sea. Reprinted in 1987.
Patna.

இதை எல்லாம் வைத்துதான் அழகன்குளம் (Argairu) என்றூ உறுதியாக நம்பினேன். அனாலும் நீங்கள் கூறியது பழைய நூல் என்பதால் ஒதுக்கி விடுவதற்கில்லை. நான் இரண்டையும் குறிப்பிட்டிருக்க வேண்டும். தவறு செய்து விட்டேன். - தென்காசி சுப்பிரமணியன்))

கேள்விகள்

ஆக அழகன்குளம் தான் ஆர்கெய்ருவா அல்லது உறையூர் தான் ஆர்கெய்ருவா? என்றறிய பின் வரும் வினாக்களுக்கு விடை வேண்டும்.

1. எரித்திரியக் கடல் ஆங்கில மொழிபெயர்ப்பில் கூறப்படும் மசுலின் என்பதற்கு இணையான மூல நூலில் உள்ள சொல் எது?
2. Argaritic என்பது தான் கடற்பட்டா?
3. எனில் அர்க்கரிட்டிக் என்ற சொல்லிற்கு இணையான வேறொரு தமிழ் சொல்லில் கடற்பட்டு அழைக்கப்பட்டதா?
4. ஆர்கெய்ரு எனக் குறிக்கப்படுவது பாண்டியரின் அழகன்குளமா? அல்லது சோழரின் உறையூரா? இந்த கேள்விகளுக்கு மற்றவர்களின் கருத்தென்ன?

இதைப் பற்றிய நூல் எழுதிய முந்தைய கால வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் இரு தரப்பிலும் நிற்கிறார்கள்.

Sunday 14 July 2013

மார்க்கோ போலோ குறிப்புகளும் கூம்போடு மீப்பாய் களைதலும்

இதைப் படிப்பவர்கள் நான் முன்பு எழுதிய கூம்போடு மீப்பாய் களைதல் என்னும் முந்தைய பகுதியையும் படித்தால் சிறப்பு.

http://fromthenmaduraitotenkasi.blogspot.in/2013/05/blog-post_22.html - கூம்போடு மீப்பாய் களைதல்

நான் கூம்பொடு மீப்பாய் களைதல் பதிவை இட்ட போது அதன் முடிவில் பாய்மரத்தை கட்டும் மரக்கூம்பு மடித்து வைக்குமாறு உருவாக்கப்பட்டதா எனக் கேட்டிருந்தேன். ஆனால் தற்பொது மார்க்கோபோலா குறிப்புகளில் 13ஆம் நூற்றாண்டில் அது போன்ற கப்பல்களை சப்பானியர் பயன்படுத்தினர் எனத் தெரிகிறது. அவர் எழுதிய குறிப்புகளை பார்ப்போம்.

வியாபாரிகள் பயணிக்கின்ற தேவதாரு மரங்களால் செய்யப்பட்டிருந்தன. பல பாய்களைக் கொண்ட நான்கு பாய்மரங்கள் அமைக்கப்படுகின்றன. அதில் இரண்டு பாய்மரங்கள் ஏற்றி இறக்கி தேவைக்கேற்ற உயரத்தில் வைத்துக்கொள்ளும் அமைப்போடு இருந்தன.

இப்போது மார்க்கோ போலோ குறிப்புகளையும் சங்க காலச் சான்றுகளையும் ஒப்பிடலாம்.

பல பாய்களைக் கொண்ட நான்கு பாய்மரங்கள் அமைக்கப்படுகின்றன. 


கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பரதவர்உபயோகித்த கலம். நான்கு பாய்மரங்களைக் கொண்டது


அதில் இரண்டு பாய்மரங்கள் ஏற்றி இறக்கி  

கோடிக் கோடுங் கூம்புயர் நாவாய் - சீவக சிந்தாமணி 2331


தேவைக்கேற்ற உயரத்தில் வைத்துக்கொள்ளும் அமைப்போடு இருந்தன.


கூம்புமுதன் முருங்கவெற்றிக் காய்ந்துடன்
(மதுரைக்காஞ்சி.376)


கூம்பொடு
மீப்பாய் களையாது மிசைப்பரந் தோண்டாது - 
(புறநானூறு.30:10-15)


ஆக இதிலிருந்து அறிவது யாதெனில் கூம்பொடு மீப்பாய் களைதல், கூம்புயர் நாவாய்,  கூம்பு முதன் முருங்க வெற்றி போன்ற சொற்றொடர்கள் தமிழர் உபயோகித்த கலங்களில் மீப்பாய் தேவைக்கேற்ப மடக்கியும் விரித்தும் களைந்தும் களையாமலும் கூம்பை உயர்த்தியும் தாழ்த்தியும் பயன்படுத்துமாறு அமைக்கப்பட்டன எனத் தெளிவாகத் தெரிகிறது.

Thursday 4 July 2013

பேரரசர் அசோகர்? பேரரசர் அக்பர்? எனில்

நமது பாடத்திட்டம் அசோகன், பாபர், அலெக்சாண்டர் போன்ற நிலத்தின் வழி நாடு பிடித்தவர்களை பேரரசன் என்னும் பட்டதுடன் அழைக்கின்றன.

Alexander The Great,
Babar The Great,
Akbar The Great etc etc

எனில் கடலின் வழி கடற்படையோடு நாடு பிடித்த குலசேகர பாண்டியன், சுந்தர பாண்டியன், இராசராச சோழன், இராசேந்திரச் சோழன் இவர்கள் எல்லாம் யார்? அவர்கள் எல்லாம் நம் பக்கத்து வீட்டுக்காரர்கள். தமிழக அரசு இனியாவது விழிப்படைய வேண்டும்.

Thursday 27 June 2013

மகாவம்சம் தமிழர் வரலாற்றை திரிக்கிறதா? தவிர்கிறதா?

நான் படித்த வரலாற்று ஆய்வு நூல்களில் மகாவம்சம் தமிழர் வரலாற்றை மறைப்பதாகவும் திரிப்பதாகவும் சிங்களவர் வரலாற்றை மட்டும் ஏற்றிச் சொல்வதாகவும் நிறைய தமிழ் ஆய்வாளர்களும் ஆர்வளர்களும் எழுதப் பார்த்திருக்கிறேன். ஆனால் என் கருத்து யாதெனில் மகாவம்சத்துக்கு தமிழர் சிங்களவர் என்ற கண்ணோட்டம் கிடையாது என்பதே. ஆனால் நான் படித்தது அனைத்துமே களப்பிரர் காலத்துக்கும் அதற்கும் முற்பட்ட மகாவம்சப் பாடல்களின் மொழி பெயர்ப்பையே ஆகும். (Before 550 AD)

இதை பின்வரும் மூன்று அனுமானங்கள் மூலம் கூறுகிறேன். ஏறக்குறைய மகாவம்சத்தின் வரலாற்றுப் பாணியும் இதைப் போன்றுதான் உள்ளது. மகாவம்சம் மன்னர்களை மூன்று விதமாக பிரிக்கிறது. அதற்கு ஏற்ப வரலாற்றுத் தகவல்களையும் தருகிறது.

1. பௌத்தத்தை மட்டும் ஆதரிக்கும் துட்டகைமுனு போன்றவர்கள்

துட்டகைமுனுவின் வரலாற்றை மகாவம்சம் மிக விரிவாகவே கூறுகிறது. அதன் அளவைச் சொல்ல வேண்டுமானால் துட்டகைமுனு எல்லாளச் சோழனை விட குறைவான ஆட்சி ஆண்டுகளையே கொண்டவன். ஆனால் எல்லாளனை விட இவனைப் பற்றி வரலாறுகள் மகாவம்சத்தில் அதிகம்.

2. எல்லாளனைப் போல மற்ற மதங்களையும் பௌத்தத்தோடு ஆதரித்தவர்கள். இவர்கள் பௌத்தம் பால் எந்த எதிர்போக்கையும் கொண்டவர்கள் அல்ல. அதே சமயம் இவர்கள் பௌத்தத்தை மட்டும் ஆதரிப்போரும் அல்ல.

இந்த இரண்டாம் பிரிவு மன்னர்களைப் பற்றி மகாவம்சம் ஓரளவு செய்திகளை கூறுகிறது.

3. பௌத்தத்தை ஆதரிக்காதவர்கள்.

கி.மு. நாலாம் நூற்றாண்டு முதல் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை உருகுணை பகுதிகளை ஒரு பாண்டியர் குலத்தோர் ஆட்சி செய்துள்ளனர். இவர்களின் கல்வெட்டுகளில் இவர்கள் கொடுத்த நில தானத்தை பார்க்கும் போது இவர்கள் ஆரம்பக் காலங்களில் பௌத்தம் இலங்கையில் அறவே இல்லை. அதனால் இவர்கள் பற்றிய தரவை மகாவம்சம் தரவே இல்லை.

தமிழர் வரலாறு மகாவம்சத்தில் திரிக்கப்படுகிறதா?

நிச்சயம் இல்லை. இதை பின்வரும் தகவல்கள் உறுதிப்படுத்தும்.

1. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் ஆறு பாண்டிய மன்னர்கள் ஏறக்குறைய 40 வருடங்கள் இலங்கையை ஆண்டுள்ளனர். இவர்களில் இருவர் பௌத்தத்தை ஆதரித்ததாக கல்வெட்டுகள் உள்ளன. இவர்களை பற்றிய வரலாறை மகாவம்சம் நிரம்பவே கூறுகிறது.

2. பல மதங்களை ஆதரித்த எல்லாளனைக் கூட மகாவம்சம் நல்ல முறையில் ஆட்சி செய்தான் என்றே கூறுகிறது. இங்கும் திரிக்கவில்லை.

3. உருகுணையை ஆண்ட பாண்டியர் குலத்தின் கடைசி பெண்ணான சவரை என்ற பெண் துட்டகைமுனுவின் தகப்பனான காக வண்ண தீசனின் முதல் மனைவி. இவள் பௌத்த மத தானங்களை அதிகம் செய்தவள். இவளைப் பற்றித் தகவலையும் மகாவம்சம் தருகிறது.

(காகவண்ண தீசனின் இரண்டாம் மனைவியே விகாரமாதேவி ஆவாள். இவர்களின் புதல்வனே துட்டகைமுனு.)

ஆக இதிலிருந்தே மகாவம்சம் தமிழனா சிங்களனா எனப் பார்ப்பதில்லை எனவும் பௌத்தத்தை ஆதரித்தவனா இல்லையா என்பதை மட்டுமே பார்க்கிறது என்பதை எளிதில் கண்டுகொள்ள இயலும்.

எனில் மகாவம்சத்தின் சிக்கல் என்ன?

மகாவம்சம் தமிழர் வரலாற்றை திரிக்கவில்லையே தவிர பௌத்தத்தை ஆதரிக்காத எந்த ஒரு அரசனையும் பற்றி நிறைவாக கூறவில்லை.

ஆதலால் பௌத்தத்தை தமிழ் மன்னர்கள் அதிகம் ஆதரிக்காதலால் மகாவம்சம் தமிழர் வரலாற்றைத் தவிர்க்கிறது.
இதனால் வரலாற்றாய்வாளர்கள் இலங்கையை "சிங்களவருக்கு முன்னர் பன்னெடுங்காலத்துக்கு முன்னரே ஆண்ட தமிழர்கள்" வரலாற்றை ஆராய வேண்டுமெனில் மகாவம்சம் மட்டும் தான் ஆதாரம் என்று நம்புவது தற்காலத்தில் மூடநம்பிக்கையே ஆகும். 

அதேசமயம் அது தமிழர் வரலாற்றை திரிக்கிறது என்று கூறினாலும் அதுவும் மூட நம்பிக்கையே ஆகும்.

Wednesday 26 June 2013

அப்பாத்துரையார் கொடுத்த தவறான தகவல்

அப்பாத்துரையார் தான் எழுதியதென்னாட்டுப் போர்க்களங்கள் நூலில் பின் வருமாறு குறிப்பிட்டிருந்தார்.

//ஜய நகரம், சுந்தர பாண்டியன் என்ற பெயர்களை உட்கொண்ட கல்வெட்டும் ஒன்று உளது. ‘ஜய நகர சுந்தர பாண்டிய தேவாதீசுவர நாம ராஜாபிஷேக’ என்பது அதன் வாசகம் ஆகும். ‘பாண்டிய’ என்ற பெயருக்கேற்ப இந்தக் கல்வெட்டில் மீன் இலச்சினையும் காணப்படுகிறது. //

அதாவது நமது தமிழக பாண்டியர்கள் அங்கே ஆண்டார்கள் என்பது போல் இருக்கும் அவர் வாதம்.

ஆனால் இந்த கல்வெட்டு செய்தி கூறும் மன்னர் மரபு தமிழகத்தை ஆண்ட பாண்டியர் மரபல்ல என்பது ஒரிசா பாலு அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நான் இணையத்தில் தேடி அறிந்து கொண்டேன். மேலும் இக்கல்வெட்டு கூறும் மன்னன் யாரென ஆராயுங்கால் அது சாவக நாட்டின் மச்சபாகீத பேரரசின் ஜெயநேகரன் (1309 - 1328என்பது தெரிய வரும்.

இவனுக்கு பின்வரும் மூன்று பெயர்கள் உண்டு.

1. ஜெயநேகரன்
2. ஸ்ரீ மகாராஜ வீரலந்தகோபால ஸ்ரீ சுந்தர பாண்டிய தேவாதீசுவரன்
3. காலஜெமெத்

அப்பாத்துரையார் குறித்த சுந்தர பாண்டிய என்னும் கல்வெட்டு இச்சாவக மன்னனையே குறிக்கிறதே அன்றி தமிழக பாண்டியர்களை குறிப்பதல்ல.

நிற்க

மச்சபாகீத பேரரசின் முதலாவது மன்னன் தன் கல்வெட்டுகளில் பாண்டியன் என்ற பெயரை சேர்த்துக் கொள்ளவில்லை. மீன் சின்னத்தையும் ஏற்றவில்லை. ஆனால் இந்த இரண்டாம் மன்னன் மட்டும் ஏன் சுந்தர பாண்டியன் என்ற ஒட்டுப் பெயரையும் மீன் சின்னத்தையும் தன் கல்வெட்டுகளில் பொறித்தான் என அலசிய போதுதான் பாண்டியர்களின் 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கூறும் செய்திகள் பலவற்றின் பொருள் பொதிந்த உண்மையை நான் அனுமானித்தேன்.

வரலாறு விரியும்.

Wednesday 19 June 2013

சீனத்துக்கு பாண்டியன் தூது

தமிழர் வரலாற்றில் ஆர்வமுடையோர் பலருக்கு சோழர்கள் சீன நாட்டிற்கு தூதனுப்பியதை நன்கு தெரிந்திருக்கலாம். நான் படித்த முக்கிய வரலாற்று ஆர்வலர்கள் எழுதிய ஆய்வு நூல்களில் இதைக் குறிப்பிடாமல் இருக்க மாட்டார்கள். ஒருவேளை படிப்பவர்களுக்கு தெரியாமல் இருந்தால் விக்கிப்பிடியாவில் சில நூல்களில் இருந்து தொக்குத்து எடுத்த தகவல்களை பின்வரும் இணைப்பில் எழுதியிருக்கிறேன். பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

http://ta.wikipedia.org/s/1yx - சோழர்களின் சீனத் தொடர்பு

ஆனால் பாண்டியர் வரலாறு பற்றி தனியாக எழுதப்பட்ட நூல்களில் கூட பாண்டியர்களுக்கும் சீனர்களுக்கும் இடையில் ஏறக்குறைய 5 முறை தூதுக்குழுக்கள் வந்துள்ளதை எழுதவில்லை.

முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்

http://ta.wikipedia.org/s/cks

இவனைப் பற்றிய ஓரளவு குறிப்புகளை மேற்கொடுத்த விக்கிப்பீடியாவின் இணைப்பு வழி அறியலாம்.  இவன் ஆட்சிக்காலத்தில் பாண்டிய நாடு (அப்போதைய பாண்டிய நாடு என்பது மூவேந்தர் அரசுகள், வட இலங்கை, தெற்கு கர்நாடகம், ஆந்திரம் வரை பரவியிருந்தது அறியப்பட்ட வரலாறு. இவனது சித்தப்பனான வீர பாண்டியன் சுந்தர பாண்டியன் ஆணையின் பேரில் ஜாவா, காடாரம், சீனாவில் சில பகுதிகள், தாய்லாந்து போன்றவற்றை வென்றான் அன்பது அறியப்படாத ஆவணப்படுத்த வேண்டிய வரலாறு.கி.பி 1268 முதல் கி.பி 1311 வரை இருந்த இவனது ஆட்சியில் தமிழகம் உலகு எங்கிலும் காணாத ளவுக்கு சீரும் சிறப்பும் பெற்றிருந்ததாக மார்க்கோ போலோ போன்ற வெளிநாட்டுப் பயனிகள் கூட குறித்துள்ளனர். ஆனால் இதைப் பற்றி எவரும் வரலாற்று நூலில் பெரிதாக கூறவில்லை.

மேலும் இவன் சார்பில் ஜமாலுதீன் என்ற அமைச்சரின் கீழே ஒரு தூதுக் குழு கி.பி.1280ல் சீனாவி
ல் உள்ள ஒரு மன்னனை சந்தித்தது. ஏதோ ஒரு உடன்படிக்கை ஏற்பட்டிருக்க வேண்டும். 

அதையேற்ற அம்மன்னன் யாங்திங் பீ என்ற தன் அவையில் இருந்து ஒரு தூதுவரை அனுப்பி வைத்தான்.  யாங்திங் பீ   கி.பி.1282ல்  பாண்டிய நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் குறிப்புகள் ஏதும் உள்ளனவா?

பின் 1283ல் பாண்டி நாட்டில் இருந்து ஒரு குழுவும் 

சீனத்தில் இருந்து ஒரு பதில் குழுவும் 

பிற்பாடு பாண்டிய நாட்டில் இருந்து ஒரு குழு 1984ல் சென்றது வரை குறிப்புகள் உண்டு.

ஆனால் இதன் குறிப்புகள் ஏன் அதிக வரலாற்று நூல்களில் சொல்லப் படவில்லை.

ஜய நகர சுந்தர பாண்டிய தேவாதீசுவர நாம ராஜாபிஷேக 

மேலுள்ளது முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஜாவக நாட்டை வென்ற கல்வெட்டு - இந்தோனேசிய சாவக சுமத்ரா தாய்லாந்து பகுதிகளில் உள்ள ஏதோ ஒரு நாட்டில் இது உள்ளது. கா. அப்பாத்துரையார் எழுதிய நூல் மட்டும் இதைக் குறிப்பிடுகிறது. ஆனல் இக்கல்வெட்டு எங்குள்ளது என இன்னும் தெரியவில்லை. பாண்டியர் மெய்கீர்த்திகளில் முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனும், முதலாம் சடயவர்மன் சுந்தர பாண்டியன் கீழ் அவனது தம்பி வீர பாண்டியனும் சீனம், காடாரத்தை வென்றதாக குறிப்புகளுண்டு. ஆனால் இதை தமிழர்கள் கண்டுகொள்ளவே மாட்டார்கள்.

Wednesday 22 May 2013

கூம்பொடு மீப்பாய் களைதல்?

தமிழ் இலக்கியங்களில் சங்க காலத்திலும் சரி சோழர் காலத்திலும் சரி கலம் செலுத்தும் பாடலகளை குறிக்கையில் கூம்பொடு மீப்பாய் களைதல் என்றே கூறுகின்றன.

மீப்பாய் என்பது பாய்மரக் கப்பலின் பாய் மரத்துணியை மட்டும் குறிக்கும். அதனால் அதைக் களைவதோ விரிப்பதோ இப்போதும் நடைமுறையில் இருக்கும் வழக்காகவே தெரிகிறது. ஆனால் கூம்பொடு (பாய் கட்டப்பட்டிருக்கும் மரம் கூம்பு போல் உள்ளதால் கூம்பொடு எனக் கூறப்படுகிறது) மீப்பாய் களைதல் என்றால் கூம்பையும் ஏற்றி இறக்க தமிழர் கலங்களில் வசதி இருந்ததா? என்ற கேள்வி என்னில் எழுந்தது.


யாங்ஙனம் பாடுவர் புலவர் கூம்பொடு
மீப்பாய் களையாது மிசைப்பரந் தோண்டாது
புகாஅர்ப் புகுந்த பெருங்கலந் தகாஅர் - புறநானூறு


போதம் கொள் நெடுந் தனிப் பொரு இல் கூம்பொடு,
மாதங்கம் வரு கலம் மறுகி, கால் பொர,
ஓதம் கொள் கடலினின்று உலைவ போன்றவே. - கம்பர் இராமாயணம்


மேலுள்ள இரண்டு பாடல்களுமே மடக்கும் கூம்புகளை தமிழர் கலங்கள் பெற்றிருந்தன எனக் காட்டுகின்றன. கம்பராமாயணம் எழுதிய போது கம்பர் தானறிந்தவற்றை சேர்த்தே எழுதியிருக்கிறார்.

20ஆம் நூற்றாண்டு கப்பல்கள் கூம்பை மடக்கும் நுட்பத்தை பயன்படுத்தினரா என அறிய ஆவல்.

Friday 3 May 2013

ஏலே! தெக்கால திரும்புனா இரண்டு கல் தொலைவுலே.

ஒரு முறை நான் என் சகாக்களோடு சில இடங்கள் சுற்றி பார்ப்பதற்காக சிறு வயதில் சென்றதுண்டு. அப்போது எங்கள் குழுவில் கிராமத்துக்காரர்கள் என்றாலே வெறுத்து ஒதுக்கும் ஒருவனும் வந்திருந்தான். அவனுக்கு கிராமத்துக்காரர்கள் எதைச் சொன்னாலும் குற்றம் கண்டுபிடிப்பதும் ஏளனம் செய்வதும் பழக்கம். இவனுக்கு என்றைக்காவது '''நல்ல பாடம்''' கற்றுக்கொடுக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். இதற்கு ஒரு நாளும் அன்று கிடைத்தது. அந்த அனுபவத்தை விளக்கும் முன்னர் தமிழர் திசைக்குறி சொல்லையும் இடக்குறிச் சொல்லையும் எப்படி பயன்படுத்தினர் என முதலில் அறிந்து கொள்ளலாம்.

நம்மூர் நகரத்தார் எனக்கூறிக் கொள்(ல்)பவர்கள் கூறுவது போல் ஒரு இடத்துக்கு வழிகாட்ட இடது வலது முறையை கிராமத்தில் பயன்படுத்துவதில்லை. மாறாக திசையையே இடச்சுட்டாக கூறுவர். நகரத்தார் முறை பல இடங்களில் குழப்பங்களையே தரும். ஆனால் திசை என்றும் மாறாதது என்பதால் கிராமத்தாரின் இடச்சுட்டு முறையே நிலைத் தெளிவை கொண்டது. இதை கடலோரத்தில் காணப்படும் பரதவர் கலம் செலுத்தும் தொழினுட்பத்தில் எளிதாகவே பயன்படுத்திக் கொண்டனர். ஆனால் சற்று வேறுபடும். கடற்பரதவர் காண்பதும் வாழ்வதும் கடல் என்பதால் வர்களுக்கு ஏற்ப சில சுட்டுகலை உருவாக்கிக் கொண்டனர். ஓதம் என்பது ஆங்கிலத்தில் எனப்படும். ஆனால் இதற்கு இணையான சொல்லான ஓதம் என்னும் சொல்லை தமிழர் உயர் ஓதம் (High Tide) தாழ் ஓதம் (Low Tide) என அழைக்காமல் கடல் ஓதம் (Tide towards Sea), கழி ஓதம் (Tide towards Shore) எனக் கொண்டனர்.

 ஒரு இடத்தில் கடல் ஓதம் உயரும் போது மற்ற இடத்தில் தாழும். பல்வேறு துறைமுகங்களில் கலம் செலுத்த வல்ல தமிழர் ஒரு குறிப்பிட்ட நேரக் கணக்கை ஒதுக்கி உயர் தாழ் ஓதம் எனக் குறிப்பிடால் குழப்பங்கள் நேரலாம். அதே மணிக்கணக்கை மற்ற இடங்களில் ஓதம் அறிய பயன்படுத்த இயலாது. அதனாலேயே கடல் நோக்கி ஓதம் வெளியேரும் கலத்தை துறைமுகத்தில் இருந்து வெளிச் செலுத்தவும் கழியை நோக்கி கடல் நகரும் போது கலத்தை உட்செலுத்த வேண்டும் என எளிதாக கொள்ளலாம்.

ஒருவரிடம் உயர் தாழ் ஓதம் கொண்டு கணக்கிடு என்று கூறுவதை விட கழி கடல் ஓதம் கொண்டு கணக்கிடு என்றால் அவனே யூகித்து கலத்தை ஓதத்தின் உதவியோடு செலுத்துவதை எளிதாக அறிந்து கொள்ள இயலும்.

ஓதம் அறிதல் என்பது சங்ககாலம் தொட்டே தமிழர் பயன்படுத்திய கலம் ஓட்டும் தொழில் நுட்பத்தில் ஒன்றாகும். ஓதத்தை (Tide) இரண்டு வகையாக்கி கழி ஓதம்(High Tide) கடல் ஓதம்(Low Tide) என இரண்டாகப் பிரித்தனர் தமிழர். கழி ஓதத்தின் போது கடல் நீரானது கரை நோக்கி நகரும். அப்போது நீர் கலத்தை கரை கொள்வதை கொல் ஓதம் என்றனர். ஓதம் குறியும் போது க்டல் நோக்கி நீர் நகரும் என்பதால் அப்போதே கரையில் உள்ள கலங்களில் ஏறி கடலுக்குள் செல்வர். ஓதம் அதிகமாக இருக்கும் போது தலைவியை ஏன் பிரிந்து செல்கிறாய் தலைவா என்று தலைவியின் தோழி தலைவனை வினவுவது போன்று அகப்பாட்டு ஒன்றும் உண்டு.[1] மேற்கொடுத்த சங்கப்பாடல்களின் மூலம் ஓதம் என்ற இயற்கை சக்தியை கலம் ஓட்ட தமிழர் பயன்படுத்தினர் என அறியலாம்.

கழி ஓதம்
கழிமுகத்தை நோக்கி வருவதால் இது கழி ஒதம்.[2] இக்கழி ஓதத்தின் போது நீரின் ஆழம் அதிகம் இருக்கும். மேலும் கடல் நீர் கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும். இதனால் கடலில் மிதக்கும் கலத்தை துறைமுகத்துக்குள் பாறைகளில் மோதாமல் எளிதாக கொண்டு வர முடியும். மேலும் கடல் நீரும் கலத்தை கரை நோக்கி நக்ர்த்துவதால் திமில் போடும் திமிலர்களின் வேலைப்பளுவும் குறையும்.

கடல் ஓதம்

ஊர்ந்த வழியே மீண்டும் ஊர்ந்தது கடல் ஓதம் என்கிறது சிலப்பதிகாரம். கழி ஓதம் ஊர்ந்து ஊரின் உள்ளே வந்த வழியில் மீண்டும் கடலுக்குள் ஓதம் செல்வதை ஊர்ந்த வழி சென்றது கடல் ஓதம் என்கிறது சிலம்பு.[3] இக்கடல் ஓதத்தின் போது கடல் நீர் கரையிலிருந்து கடல் நோக்கி கலத்தை செலுத்தும். இதனால் கடல் ஓததின் போதே மீனவரும் கடலோடிகளும் கலத்தில் பயணத்தை தொடங்குவர்.

வெளியிணைப்புகள்

மேற்கோள்களும் குறிப்புகளும்

  1. கழியே, சிறு குரல் நெய்தலொடு காவி கூம்ப எறி திரை ஓதம் தரல் ஆனாதே துறையே, மருங்கின் போகிய மாக் கவை மருப்பின் - அகம் 350
  2. பெருங் கடல் முழங்க, கானல் மலர, இருங் கழி ஓதம் இல் இறந்து மலிர, - நற்றிணை - 117
  3. ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய்; மற்று எம்மொடு தீர்ந்தாய் போல் தீர்ந்திலையால்; வாழி, கடல் ஓதம்! - சிலப்பதிகாரம்: புகார்க் காண்டம்: கானல் வரி

சரி இனி நம் சகாக்களின் கதையை அறியலாம். ஒரு முறை நான் ஒரு கிராமத்தாரிடம் வழி கேட்ட போது  "ஏலே! தெக்கால திரும்புனா இரண்டு கல் தொலைவுலே." என்று அவர் பதிலளித்ததும் இவன் பல்லிழித்தான். "இதென்னடா நாகரிகமா சொல்லாம இந்த ஆள் தெக்கால கிழக்காலன்னுட்டு. அறிவு கெட்டவனுங்க." என்று கூற எனக்கு ஏகக்கடுப்பு. இவனை ஏன்டானு கூட்டிட்டு வந்தோம்னு. இவனை வெகுதூரத்தில் அதிகம் உட்கிராமத்துக்குள் நான் அழைத்து சென்றுவிட்டேன் அதுவும் சந்து பொந்துகளுக்குள் எல்லாம் நுழைந்து நல்ல வெட்டவெளிக்கு கூட்டி போயாயிற்று.

வேனும் என்றே கண்ணாம்பூச்சி விளையாட அவனை அழைத்தேன். பாதி விளையாடிக் கொண்டிருக்கும் போது தலைவரின் முறை வந்தது. அவன் கண்ணைக் கட்டியவுடன் அவனிடம் நாங்கள் இடப்பக்கமாக செல்கிறோம் என்று கூறிவிட்டு அவனை நல்ல சுற்றி விட்டு விட்டு நாங்களெல்லாம் மரத்துக்குள் ஓடி மறைந்தாயிற்று. அவனும் எங்களை தேடு தேடு எனத் தேடி வட்டத்துக்குள் நாங்கள் எங்கும் இல்லை என்றவுடன் அவன் கிலியோடு கண்கட்டை அவிழ்த்து பேந்த பேந்த விழித்தான். இடமோ பலமரங்கள் சூழ்ந்திருக்கும் வெட்டவெளி அவனுக்கு நாங்கள் கண்ணை கட்டுமுன் கூறிய இடப்பக்கம் எது என்று இப்போது ஏகக்குழப்பம். தலைவருக்கு வெட்டவெளியில் இருந்து தப்பி வரவும் தெரியவில்லை.

சரி போதும் பையன் அழுதுவிட போகிறான் என நினைத்து "ஏலே! தெக்கால திரும்புனா இரண்டு கல் கல் தொலைவுலே." என்று நான் கூவ அவன் ஏகக்கடுப்பாயிப் போயி விழித்தானே ஒரு விழி. வாழ்நாள் முழுதும் அதை நான் மறக்கவே மாட்டேன்.

இப்போ தெரியுதாலே. "தெக்கால திரும்புனா பத்து கல் தொலைவுலே." அப்படின்னு சொல்றது அறிவாளித்தனமா அல்லது இடது வலது சொல்றது நாகரிகமா என்று. யாருகிட்ட!!!

நாங்கெல்லாம்

ஆமைகளின் வழித்தடம் கண்டு கடலோடியவன் ஆதித் தமிழன்

வம்சம்டா... வம்சம்டா... வம்சம்டா...

இனி ஒரிசா பாலு போன்றவர்கள் உயர் தாழ் ஓதங்களின் இடையிலுள்ள அளவு எங்கெல்லாம் குறைவோ அங்கெல்லாம் தமிழர் தொடர்பு இருக்கும் என்ற ரீதியிலும் தேடலாம். தேடல் சிறிது எளிதாக வாய்ப்புண்டு.