Wednesday 15 January 2014

இலங்கையில் சமணர்

தலைப்பே பெருஞ்சிக்கல் போல் தெரியலாம். ஆனால் வரலாற்று ஆய்வாளர்கலால் ஏற்கனவே எழுதப்பட்ட ஒரு வரலாற்றுச் சான்றை கொடுத்துவிட்டு வந்தால் ஓரளவு முடிசுகள் அவிழும்.

இலங்கையில் வரலாற்று ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமணரின் (தமிழரா என்பது வேறு) முதல் படையெடுப்பின்/ஆதிகத்துக்கான சான்று கி.பி. ஐந்தாம் நூற்றாண்டே.

நிகந்தர்


நிகந்தர் என்பவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்களால் தமிழ்நாட்டை ஆண்டவர்களாகக் கருதப்படும் ஒரு அரசவம்சத்தினர் ஆவர். நிகந்தர் என்பதற்கு சமண மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொருள். இவர்கள் இலங்கை மௌரிய மன்னர்கள் வம்சத்துள் மூன்றாமானவனான முதலாம் மொக்கல்லானன் என்பவனுக்கு மொக்கல்லானனின் மாற்றாந்தாய் மகனும் இலங்கை மௌரிய மன்னர்கள் வம்சத்துள் இரண்டாமனவனுமான முதலாம் காசியப்பன் என்றவனை எதிர்ப்பதற்கு உதவினார்கள்.

நிகந்தர்கள் யார்?


* இலங்கை மௌரிய மன்னர்கள் வழிவந்தவர்கள் இலங்கையை ஆண்ட போது இவர்கள் தமிழ்நாட்டை ஆண்டதாக சூல வம்சம் என்னும் இலங்கை வரலாற்று நூலில் கூறப்படுவதால் இவர்களின் காலம் பொ.பி. 450 - 550 என்று கூறலாம்.
* நிகந்தர் என்பதற்கு சமணர் என்ற பொருள்படுவதால் இவர்கள் சமண சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதியாகிறது.
* அதேசமயம் களப்பிரர் என்ற தமிழகத்தை ஆண்ட மன்னர்களும் சமண சமயத்தையே ஆதரித்தனர்.
* அக்காலத்தில் தமிழகத்தை ஆண்ட பல்லவர்களும் பௌத்தம் என்ற புத்தமதத்திற்கே அதிகம் ஆதரவளித்தனர்.

நிகந்தர்கள் களப்பிரர்களே



* இலங்கை மௌரிய மன்னர்கள் ஆரம்ப காலத்தில் தமிழ்நாட்டில் களப்பிரர் கையே ஓங்கியிருந்தது.
* இலங்கை மௌரிய மன்னர்கள் வம்சத்துள் முதலாமானவனான தாதுசேனன் என்பவன் பாண்டியர் வம்சத்துள் இலங்கை இராசராட்டிரம் பகுதியை ஆண்ட ஆறு இராசராட்டிரப் பாண்டியர்களிடமும் போரிட்டவன். அதனால் மொக்கல்லானனுக்கு பாண்டியர்களின் உதவி கிடைத்திருக்க நியாயமில்லை.
* மேலும் நிகந்தர்கள் பெரும்படையை உதவிக்கு அனுப்பினர் என்று கூறப்படுவதால் இவர்கள் பாண்டியர்களாக இருக்க முடியாது. அக்காலத்தில் பாண்டியர்கள் களப்பிரர் ஆட்சிக்கு கீழிருந்தனர். அதனால் களப்பிரர்களே பெரும்படையை வைத்திருக்கக் கூடும்.

மேற்கொடுத்த தகவல்களை கொண்டு நிகந்தர்கள் களப்பிரர்களே என்று மயிலை சீனி. வேங்கடசாமி நிறுவுகிறார்.

இதைப் போன்று வேறு சில சமண சமய மன்னர்களும் இலங்கைக்கு படை எடுத்திருக்கலாம். இல்லை இங்கிருந்து சென்ற வணிகர்கள் அங்கு சமணத்தை பரப்பி அதை ஆதரித்த குலம் ஏதாவதும் இலங்கையில் இருந்திருக்கலாம்.

ஆனால் என் "உருகுணைப் பாண்டியர்கள்" ஆய்வுக்கட்டுரையில் கூறப்படும் இலங்கையில் நடந்த சமணப் பரவல் என்பது கி.மு. நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும். உருகுணைப் பகுதியில் கிடைத்த காசுகளையும் கல்வெட்டுகளையும் ஆராய்ந்த போது அப்பகுதியில் கி.மு. நாலாம் நூற்றாண்டுக்கு முன்னர் இருந்து கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முன் வரை ஒரு பலம் வாய்ந்த பாண்டிய இராச்சியம் இருந்ததாக தெரிகிறது. அவர்கள் கொடுத்த குகைத்தானம் சமண சமயம் சார்ந்த்தாக இருக்கலாம்.

உருகுணைப் பாண்டியர்கள்


உருகுணைப் பாண்டியர்களில் அறியப்படும் முதல் வேந்தனான மஜிமஹா ராஜன் கொடுத்த தானம் சங்கத்துக்கு கொடுக்கப்பட்டது எனக் கல்வெட்டு கூறுவதால் அந்த சங்கம் எது என ஆராய்தல் வேண்டும். தேவநாம்பிய திச்சனுக்கு முன்னரே மஜிமஹராஜன் ஆண்டதாக கூறுவதால் அக்காலத்தில் இலங்கையில் பௌத்த சங்கம் இருக்க வாய்ப்பில்லை. அதனால் இது சமண சங்கமே எனக் கூறலாம். இதற்கு வழு சேர்க்கும் விதமாக இலங்கையில் "சூடஷமணஹ" என்னும் பிராகிருதப் பிராமி எழுத்துக்களுடன் ஆமை வடிவம் பொறித்த காசே சான்றாகும்.1

       மேலும் மஜிமஹராகன் காசில் தன் பெயரைப் பொறித்த‌தும் அல்லாமல் பின்பக்கத்தில் களிறையும் பொறித்துள்ளான். தமிழகத்திலும் இலங்கையிலும் கிடைத்த பாண்டியர் காசுகளில் களிறுகயல்ஆமையானை போன்றவை முக்கியப் பங்கு வகிப்பவை.2 தமிழகத்தில் உள்ள மாங்குளக் கல்வெட்டு நடனகாசிநாதனின் அகரமேறிய மெய் முறைமைப்3 படி கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு என நிறுவப்பட்டுள்ளது. இதில் பாண்டியன் நெடுஞ்செழியன் சமணர்களுக்குக் கொடுத்த தானம் பற்றி உள்ளது. அதனால் சமணம் கி.மு. நாலாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழகத்தில் பரவி நாலாம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கையில் பரவியதாகக் கொள்ள முடியும். தேவநாம்பியன் காலத்திற்குப் பிறகு தென் இலங்கையில் பரவிய பௌத்தம் சமண மத ஆதிக்கத்தை குறைத்திருக்கலாம்.


இதுவும் உருகுணையில் கிடைத்த காசுதான். பின்னால் 9ஆமைகள் சுற்றுகின்றன. முன்னால் கபதிக சமணசபுதசட‌கடக என்றுள்ளது. கபதி என்றால் பிராகிருதத்தில் குடும்பம் என்று பொருள். சேர்த்துப் படித்து பொருள் உணர்ந்தால் இதை சமனாச குடும்பத்தலைவனின் மகன் சடகன் கொடுத்தவை என பொருள் தரும்.

ஆகையால் சமணம் இலங்கையில் பௌத்தம் பரவுவதற்கு முன்னரே இருந்தது என்று உறுதியாகக் கூற இயலும். 

மேற்கோள்கள்:

1. ஈழத்தமிழரின் பண்டைய கால நாணயங்கள்புட்பரத்னம்-2001, பக்கம்– 49, 53

2. ப. சண்முகம் (2003) சங்கக்காலக் காசு இயல், சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். (பக்கம் 32-46)
3.தமிழ் விக்கிப்பீடியாஅகரமேறிய மெய் முறைமைநடனகாசிநாதன்ஐ.மகாதேவன்மயிலை சீனி. வேங்கடசாமி போன்ற ஆய்வாளர்கள் கூறிய அகரமேறிய மெய் முறைமை குறிப்புகளை தொகுத்து எழுதப்பட்ட கட்டுரை
(இணைப்பு: http://ta.wikipedia.org/wiki/அகரமேறிய_மெய்_முறைமை)

No comments:

Post a Comment