Sunday 2 September 2012

குத்துக்கல்வலசையின் பெருங்கற்கால பண்பாடு

இதைப் படிப்பவர்கள் நான் முன்னர் எழுதிய 2 பதிவுகளையும் படித்துவிட்டு இதைப்படிக்க வேண்டுகிறேன். 

பெருங்கற்கால மக்கள் வேல் (ஒருதலைச் சூலம்), சூல வழிபாட்டையும் மேற்கொண்டனர். இவை பிற்பாடு முருக வழிபாடாகவும் சிவன் துர்க்கை வழிபாடாகவும் மாற்றப்பட்டது. ( http://ta.wikipedia.org/s/qho )
குத்துக்கல் வலசையிலும் இதைப் போலவே சூல வழிபாட்டுச் சின்னம் காணப்படுகிறது.



நிற்க 

இதற்கருகில் இவர்கள் முன்னோர் காலத்தில் இந்த சூலத்தையோ இதைப் போன்ற மற்றொரு சூலத்தையோ பக்கத்தில் காணப்படும் கல்படிகளின் மேற்பகுதியில் குத்தி வழிபட்டிருக்கலாம்.


பொதியில் ஆயர்கள் 

கழல்தொடி ஆஅய் மழைதவழ் பொதியில் - குறுந்தொகை 84

என்று கூறப்படும் பொதியில் ஆயர்கள் இங்குள்ள இடையர் மக்களுக்கு தொடர்புடையவராய் இருக்கலாம். இங்குள்ள இடையர் மக்களே  குத்துக்கல்லை வழிபட்டதாகவும் தற்போது வழிபடுவதில்லை என்றும் கூறினர். 

ஆயர் அல்லது இடையர் இவர்கள் புதிய மற்றும் பெருங்கற்காலத்திலும் 
முக்கிய பங்காற்றியவர்கள். சங்க இலக்கியத்திலும் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இதை ஆயர் குல மன்னர்களிடமிருந்து கைப்பற்றியதாக மதுரைக்காஞ்சி பாடல்கள் உண்டு. அவை,

1. அவை இருந்த பெரும்பொதியில் பேய்மகளிர் ஆடத் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் வென்றான் -மதுரைக்காஞ்சி 161


2. திதியன் என்ற மன்னன் பொதியிலை ஆண்டான்.

செல்சமம் கடந்த வில்கெழு தடக்கை, பொதியிற் செல்வன் பொலந்தேர்த் திதியன், இன்னிசை இயத்தின் கறங்கும் கல்-மிசை அருவி (குற்றாலம்) – ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் – அகம் 25

3. திதியன் என்றவனை தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் வென்றான்.
கொய்சுவற் புரவிக் கொடித்தேர்ச் செழியன்
ஆலங் கானத்து அகன்தலை சிவப்பச்,
சேரல், செம்பியன், சினம்கெழு திதியன் - அகம் 36

ஒரு வேளை திதியனே கூட பொதியில் ஆயர் தலைவனாக இருக்கலாம். அதனால்  திதியனை வென்ற தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் அவன் ஆண்ட பொதியிலை பின்னொரு காலத்தில் வென்றிருக்கக் கூடும். 

மேலுள்ள சான்றுகளை வைத்து பார்க்கும் போது பொதியில் ஆயர் மறக்குணம் மிக்கவராய் இருந்தனர் என்பது தெளிவு.

படிநிலை வளர்ச்சி

1. குத்துக்கல், நடுகல் வழிபாடு
2. சின்ன வழிபாடு - இப்பதிவில் மேற்கூறப்பட்ட சூல வழிபாடு
3. பின்னர் உருவ வழிபாடு.

இம்மூன்றுமே வழிபாட்டு முறையில் அடுத்தடுத்து வருவன. இதை வைத்து பார்க்கும் போது பெருங்கற்கால சமூகம் இங்கு தொன்றுதொட்டு இருந்தது தெரிகிறது.

No comments:

Post a Comment